பைக் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தம் வாகன ஓட்டிகளால் பொதுமக்கள் பாதிப்பு
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், இரு சக்கர வாகனங்களின் சைலன்சர்களை மாற்றி, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதும் அதிகரிக்கிறது.பெங்களூரில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய வாகனங்கள், சாலைகளில் இயக்கப்படுகின்றன. ஒலி மாசு இரண்டு மடங்கு அதி கரிக்கிறது. சில இளைஞர்கள், கம்பெனிகளிடம் வாங்கிய பைக் அல்லது, தங்களிடம் ஏற்கனவே உள்ள பைக்குகளின் சைலன்சர்களை அகற்றி, அதிக சத்தம் எழுப்பும் சாதனங்களை பொருத்துகின்றனர்.சாலையில் பைக்கை ஓட்டும் போது, இரைச்சலாக சத்தம் எழுப்பியபடி செல்கின்றனர். இதனால் மற்ற வாகன பயணியர், பொது மக்கள் பதற்றம் அடைந்து பரிதவிக்கின்றனர்.முதியவர்கள், குழந்தைகள், மாணவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள், அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் அவஸ்தையாக உள்ளது.இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.டி.தாசரஹள்ளி, வித்யாரண்யபுரா, பீன்யா தொழிற் பகுதி, நைஸ் சாலை, சுங்கதகட்டே, இந்திரா நகர், கெங்கேரி, எலக்ட்ரானிக் சிட்டி, ராஜராஜேஸ்வரி நகர், மாகடி சாலை, கே.ஆர்.மார்க்கெட், சாம்ராஜ்பேட், கலாசிபாளையா, சர்ச் தெரு, எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, குயின்ஸ் சாலை, கோரமங்களா பகுதிகளில், இத்தகைய பிரச்னை உள்ளது.