உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் பிரதமர் வருகையின் போது செயல்வடிவம் பெறும்; துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தகவல்

புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் பிரதமர் வருகையின் போது செயல்வடிவம் பெறும்; துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தகவல்

புதுச்சேரி; புதுச்சேரிக்கான மகத்தான திட்டங்கள் பிரதமர் மோடியின் வருகையின் போது செயல்வடிவம் பெறும் என, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார். துணை ஜனாபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்று முதல்முறையாக புதுச்சேரிக்கு வந்ததையடுத்து, அரசு சார்பில் அவருக்கு கம்பன் கலையரங்கில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.விழாவில், ராஜ்பவன் தொகுதி குமரகுரு பள்ளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டன் கீழ் கட்டப்பட்டுள்ள 216 குடியிருப்புகளுக்குக்கான சாவியை பயனாளிகளுக்கு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மண்ணோடு எனக்கு உள்ள தொடர்பு என்றைக்கும் தொடரும். புதுச்சேரி அன்பையும், அரவணைப்பையும், காலங்காலமாக பறைசாற்றும் நகரம். புதுச்சேரி பண்பாட்டு கலாசார மையம் என்பதே புதுச்சேரியின் உள்ள மகத்தான பெருமை.மனிதன் பிறக்கும்போது சுதந்திரமாக பிறக்கிறான், ஆனால் அவன் உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளன என்பதை உடைத்தெறிந்தது பிரெஞ்சு புரட்சி. மனித உரிமைகளை உலகிற்கே நிலை நாட்டியது பிரெஞ்சு புரட்சி. இந்த புனித நிலம் அரவிந்தர், அன்னை ஆகியோரின் மாபெரும் சிந்தனையாளர்களுக்கு சிறப்பிடம் அளித்து, ஆன்மிக முன்னேற்றத்தையும், மனித ஒருமைப்பாட்டையும் இணைக்கும் தத்துவ பார்வையை உலகிற்கு வழங்கியது. அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து 115 ஆண்டாகிறது. அரவிந்தர் மனித உயர்வை பற்றி பேசினார், எழுதினார். அவர் அரசியல் மாற்றம் மட்டும் போதாது, ஆன்மிகமும், சமூகமும் ஒருங்கே உயர வேண்டும். அது தான் நிலையான நல்ல மாற்றத்தை தரும் என அரவிந்தர் கூறினார். அன்னை இந்த சிந்தனையை வாழ்வியலாக மாற்றிக் காட்டினார். அதன் விளைவாக ஆரோவில் உன்னதமான இடமாக உலகெங்கும் பார்க்கப்படுகிறது.பாரதி புதுச்சேரிக்கு வந்தபோதுதான் முழு சுதந்திரத்தை சுவாசித்தார் . கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற மகத்தான படைப்புகள் புதுச்சேரியில் தான் உருவானது. இங்குதான் வ.வே.சு., அய்யர், பாரதிதாசன் உட்பட பலர் தமிழின் அறிவுச்சுடராக புதுச்சேரியை மாற்றினர்.சித்தர் சுற்றுலா மேம்பாடு என பல விஷயங்களை நான் இங்கு கவர்னராக இருந்த போது மேற்கொண்டதை பெருமையாக கருதுகிறேன். தமிழ் மீது பிரதமர் மோடிக்கு உள்ள அளப்பரிய பாசத்தை இன்றும் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முறை வானொலியில் பேசிய போது தமிழ்தான் மிக தொன்மையான இந்திய மொழி என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளார்.தமிழ் மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் கொண்டுள்ள பாசத்தின் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் அதிகமாக அளித்துள்ளார். இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு சாவியை வழங்கியுள்ளோம். உணவு, உடை, இருப்பிடம் வழங்க அரசு இடையறாது செயல்படுகிறது. இன்னும் அதிகமான அக்கறையோடு அடிப்படை வசதிகளை நாம் செய்து தர வேண்டும்.விரைவில் மகத்தான திட்டங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளது. பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது அந்த திட்டங்களுக்கு செயல்வடிவம் கிடைக்கும். அழகிய புதுச்சேரி ஒற்றுமையில், இந்தியாவின் அடையாளமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்மாதிரியாகவும் தொடர்ந்து ஒளிரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ