உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவர் - சிறுமியரை வைத்து ஆபாச வீடியோ மொபைல்போனில் பார்த்தாலே தண்டனை சுப்ரீம் கோர்ட் அதிரடி; ஐகோர்ட் தீர்ப்பு ரத்து

சிறுவர் - சிறுமியரை வைத்து ஆபாச வீடியோ மொபைல்போனில் பார்த்தாலே தண்டனை சுப்ரீம் கோர்ட் அதிரடி; ஐகோர்ட் தீர்ப்பு ரத்து

புதுடில்லி, 'குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வதும், பார்ப்பதும், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமே' என, மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் ஆபாச படம் என்ற வார்த்தையை மாற்றுவதற்கான சட்டத் திருத்தம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டம்

ஆபாச படங்களை தன் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ததாகவும், அவற்றை பார்த்ததாகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ், 28, என்பவர் மீது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜன., 11ல் அளித்த உத்தரவில், 'பதிவிறக்கம் செய்வது மற்றும் பார்ப்பது குற்றமாகாது' என்றார்.உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டதாவது: போக்சோ சட்டம் என்பது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதாகும். இந்த சட்டத்தில் குற்றங்கள் எவை, அவற்றுக்கு என்ன தண்டனை என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டம் - 67பி பிரிவின்படி, குழந்தைகளை ஆபாசமாக காட்டும் வகையில் படங்களை வெளியிடுவது, மற்றவர்களுக்கு அனுப்புவது உள்ளிட்டவையே குற்றமாக கூறப்பட்டுள்ளது.ஆனால், ஒருவர் தன் மொபைல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது, அவற்றை பார்ப்பது குற்றமாக கூறப்படவில்லை. அதனால், இவர் மீது இந்தச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆலோசனை

ஆபாச படங்களை பார்ப்பது ஒரு மனநோயாக மாறியிருந்தால், இந்த நபர் தகுந்த ஆலோசனைகளை பெற வேண்டும்.தற்போது சிறுவர் - சிறுமியரும் ஆபாச படங்களை பார்க்கும் நிலை உள்ளது. இதில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். இதற்காக தண்டனை அளிக்க முடியாது. அதே நேரத்தில், ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது. இதை எதிர்த்து, குழந்தைகள் பாதுகாப்புக்கான அரசு சாரா அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.

பாலியல் வன்முறைகள்

அமர்வு நேற்று அளித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளையும் நாம் பார்க்க வேண்டும். இது போன்ற படங்களை பார்ப்பவர்களால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பாலியல் வன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பல வழக்குகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். பாலியல் வன்முறையில் தொடர்ச்சி 7ம் பக்கம்குழந்தைகள் ஆபாச படம்...முதல் பக்கத் தொடர்ச்சிஇருந்து குழந்தைகளை பாதுகாப்பது, குற்றங்கள் தொடர்பாக புகார் அளிப்பது, இந்த விஷயத்தில் சமூகத்தின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாகவும் பலமுறை பேசியுள்ளோம்.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பகிராவிட்டாலும், பதிவிறக்கம் செய்வதும், அதை பார்ப்பதும் குற்றமே. இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் தவறு செய்து விட்டது. இந்த விஷயத்தில் அவர் செய்த குற்றத்தைவிட, அதற்கான நோக்கத்தையே பார்க்க வேண்டும். போக்சோ சட்டத்தின்படி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதும் குற்றமே. அதற்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றம் இதில் சரியான முடிவை எடுக்கவில்லை.இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் ஆபாச படம் என்ற வார்த்தையை, குழந்தைகள் தொடர்பான ஆபாசமாக காட்டும் மற்றும் சுரண்டும் வகையிலான பொருட்கள் என்று மாற்றலாம். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவசர சட்டத்தை கொண்டு வரலாம். நீதிமன்றங்களும் இனி, குழந்தைகள் ஆபாச படங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், இந்த சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. நம் நாட்டிலும் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது.இதன்படி, உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புகார் கூறப்பட்ட நபர் மீது, நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை நடத்தலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'உலகுக்கே வழிகாட்டும்'

இந்த வழக்கைத் தொடர்ந்த, 'ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற அரசுசாரா அமைப்பின் நிறுவனர் புவன் ரிபு கூறியுள்ளதாவது:உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரலாற்று சிறப்புமிக்கது. சமூகம், குற்றங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பில், இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர், இணையதளத்தில் இருந்து குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்யும்போது, அதற்கான தேவைகளை உருவாக்குகிறார். இதுபோன்ற படங்களை பார்ப்பது குற்றமாக்கும்போது, அதை உருவாக்குவது குறையும். இதன் வாயிலாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் குறையும். உச்ச நீதிமன்ற உத்தரவு, நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் கல்விக்கு ஆதரவு!

உச்ச நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது:நம் நாட்டில், பாலியல் கல்வி குறித்த தவறான கண்ணோட்டம் விரிவாக உள்ளது. பெற்றோர், கல்வியாளர் உட்பட பல்வேறு தரப்பினரும், 'பாலியல் கல்வி தொடர்பாக விவாதிப்பது சரியானதல்ல, பாரம்பரியத்துக்கு எதிரானது, சங்கோஜமாக உள்ளது, மேற்கத்திய நாடுகளின் கலாசாரம்' என, பழமைவாத கண்ணோட்டத்துடன் உள்ளனர். இந்த சமூக சிக்கலே, பாலியல் பிரச்னை தொடர்பாகவும், பாலியல் சுகாதாரம் தொடர்பாகவும் பேசுவதற்கு தடையாக உள்ளது. இதனால், இளம் தலைமுறையினரிடம் பாலியல் தொடர்பான புரிதலில் பெரும் இடைவெளி உள்ளது.இந்த கண்ணோட்டத்தை உடைத்து, பாலியல் கல்வியை முறையாக கற்றுத்தர வேண்டும். இது, இளம் தலைமுறையினரின் சுகாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; குற்றங்கள் குறைவதற்கும் உதவும். மக்கள்தொகை பெருகி வரும் நம் நாட்டுக்கு, பாலியல் கல்வி மிகவும் அவசியமான ஒன்று.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை