டில்லியில் இண்டி கூட்டணி போராட்டம் ராகுல், அகிலேஷ் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை
பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, தேர்தல் கமிஷனை கண்டித்து இண்டி கூட்டணி சார்பில் தலைநகர் டில்லியில் போராட்டம் நடந்தது. அப்போது தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் போலீசாருக்கும், எம்.பி.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. பார்லிமென்ட் நேற்று கூடியதும் பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனால், இரு சபைகளிலும் கடும் அமளி நிலவியதால், நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பார்லி.,யின் மகர் துவாரில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் இருக்கும் பகுதி நோக்கி இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் ஒன்று திரண்டு, கைகளில் பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், ஏமாற்றமடைந்த எம்.பி.,க்கள் பலர் சாலையில் அமர்ந்து தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக திரிணமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஞ்ஜனா ஜாதவ், ஜோதிமணி ஆகியோர் தடுப்புகளை தாண்டி குதிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால், பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடுப்புக் காவலில் கைது செய்த போலீசார் பஸ்ஸில் ஏற்றி பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைத்து எம்.பி.,க்களும் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தின்போது திரிணமுல் எம்.பி.,க்கள் மொய்த்ரா மற்றும் மிதாலி இருவரும் மயக்கமடைந்ததால், அவர்களுக்கு ராகுல் உதவினார். தடுப்புக்காவலில் போலீசார் அவரை கைது செய்து பஸ்ஸில் ஏற்றினர். அப்போது பேசிய அவர், ''அரசியலுக்காக இந்த போராட்டம் நடக்கவில்லை. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம். 'ஒரு நபருக்கு, ஒரு ஓட்டு' என்பதை உறுதி செய்யவும், முறைகேடுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடக்கிறது,'' என்றார். டில்லியில் நடந்த இந்தப் போராட்டத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், மூத்த எம்.பி.,க்கள் சரத்பவார், சிதம்பரம், சஞ்சய் ராவத், கே.சி.வேணுகோபால், கனிமொழி, ராஜா, டி.ஆர்.பாலு, சுப்ரியா சுலே உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர் -நமது டில்லி நிருபர் - .