இனிப்பு கடையில் பலகாரம் சுட்ட ராகுல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள பிரபலமான, 'கண்டேவாலா' இனிப்பு கடையில், 'ஜாங்கிரி, பேசன் லட்டு' தயார் செய்யும் பணியில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஈடுபட்டார். தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான, 'கண்டேவாலா' இனிப்பு கடைக்கு, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று சென்றார். கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர், ஜாங்கிரி, பேசன் லட்டு ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார். இது குறித்து ராகுல் வெளியிட்ட பதிவு:
தீபாவளியின் உண்மையான இனிப்பு, தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும், சமூகத்திலும் உள்ளது. டில்லியின் பிரபல மான, 'கண்டேவாலா' இனிப்பு கடையில் ஜாங்கிரி, பேசன் லட்டு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டேன். நுாற்றாண்டுகளை கடந்தும், இந்த இனிப்பு கடையில், சுவை மாறாமல் அப்படியே உள்ளது. நீங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறீர்கள். அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இந்திரா, ராஜிவ் என ஒட்டுமொத்த குடும்பத்துக்கே தங்கள் கடையில் இருந்து இனிப்புகள் வழங்கியதாக, ராகுலிடம் கடை உரிமையாளர் கூறுவது வீடியோவில் இடம் பெற்றுள்ளளது. மேலும், உங்களின் திருமணத்துக்கு இனிப்புகள் வழங்க காத்திருப்பதாக கடை உரிமையாளர் கூறியதும், ராகுல் சிரித்தார்.