UPDATED : டிச 11, 2024 08:07 PM | ADDED : டிச 11, 2024 05:48 PM
புதுடில்லி: பார்லிமென்ட் வந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சி தலைவர் தேசியக்கொடி மற்றும் ரோஜாப் பூ ஒன்றை அளித்தார். அதனை ராஜ்நாத் பெற்றுக் கொண்டார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது நடந்து வருகிறது. அதானி குறித்த விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அவையின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. மேலும், இதனை விவாதிக்க வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கை உள்ள அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கும் அமைப்புடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ., எதிர் பிரசாரம் செய்து வருகிறது. இதனால், பார்லி., நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.இன்றும் பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பார்லிமென்டில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில், 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேசியக்கொடிமற்றும் ரோஜா பூவை பரிசளித்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக பார்லி கூட்டத்தொடரில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். அப்போது அவரை நோக்கி புன்னகைத்தபடி வந்த ராகுல், தேசியக்கொடி மற்றும் ரோஜா பூவை கொடுத்தார். இதனை ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டு சென்றார்.இதேபோன்று, மற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் தேசியக்கொடி மற்றும் ரோஜாப்பூக்களுடன் ராஜ்நாத் சிங்கிற்கு அளிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்து அவை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கு இதனை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.