உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா காங்., எம்.பி., சீட்டுக்கு அடியில் 500 ரூபாய் கட்டு

ராஜ்யசபா காங்., எம்.பி., சீட்டுக்கு அடியில் 500 ரூபாய் கட்டு

ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டிருந்த இடைவேளை நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நேற்று முன்தினம் நடந்த வழக்கமான சோதனையின் போது, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வியின் இருக்கைக்கு அடியில், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பார்லிமென்ட் நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்கப்படும் இடைவெளியிலும், அன்றைய அலுவல்கள் முடிந்த பிறகும், பாதுகாப்பு காரணங்களுக்காக சபை முழுதும் சோதனை நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, ராஜ்யசபா நேற்று முன்தினம் ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில் பாதுகாவலர்கள் சோதனை நடத்தினர்.

சோதனை

அப்போது, ஒரு இருக்கையின் கீழ், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக கிடப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதை, ராஜ்யசபா செயலகத்தில் முறைப்படி ஒப்படைத்தனர். ராஜ்யசபா நேற்று கூடியதும், இந்த விவகாரம் பகிரங்கமாக வெடித்தது.வழக்கமான, 'ஜீரோ' நேர அலுவல்கள் துவங்கப்போகின்றன என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், சபை தலைவர் ஜக்தீப் தன்கர், “ராஜ்யசபாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழக்கமாக நடக்கும் சோதனை நேற்று முன்தினம் நடந்தபோது, 222ம் எண் இருக்கையின் கீழ் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டெடுக்கப்பட்டுஉள்ளது.“அது, காங்கிரஸ் கட்சி சார்பில், தெலுங்கானாவில் இருந்து எம்.பி.,யாக தேர்வாகி வந்துள்ள அபிஷேக் மனு சிங்வியின் இருக்கை. இதுகுறித்து, உரிய விசாரணை நடக்கிறது,” என்றார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனை செய்வது வழக்கம் தான். ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணை மேற்கொள்வதையும் வரவேற்கிறோம். ''ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட இருக்கைக்குரிய எம்.பி.,யின் பெயரை எதற்காக சபையில் அறிவிக்க வேண்டும்? இதை ஏற்க முடியாது,” என்றார்.

கூச்சல்

இதற்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தங்கள் ரகசிய நடவடிக்கைகளையும், சந்தேகத்துக்கிடமான விஷயங்களையும் மறைக்கும் கட்சி காங்கிரஸ். எனவே தான், தங்கள் கட்சி எம்.பி., பெயரை சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' எனக் கூறவும், கூச்சல் குழப்பம் ஆரம்பமானது.அதற்கு பதிலடியாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “உண்மைகளை மறைக்கும் வழக்கம் பா.ஜ.,வுக்கு தான் உண்டு. 'பெகாசஸ், ஹிண்டன்பர்க்' என எல்லா விஷயங்களிலும் உண்மைகளை அமுக்கக் கூடியவர்கள் நீங்கள்,” என்றார். இதை தொடர்ந்து சபையில் கூச்சல் அதிகரித்தது.

அமளி

அப்போது சபை முன்னவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, “இது மிகவும் முக்கியமான விவகாரம். சபையின் கண்ணியத்தை பாதித்து உள்ளது. ''இந்த சபையில் இதுபோன்ற செயல்கள் நடப்பது கவலை அளிக்கிறது. முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்,” என்றார்.இந்த கூச்சல் குழப்பத்திலேயே அரை மணிநேரம் கழிந்துவிட, அதன்பின் அலுவல்கள் நடந்தன.இருப்பினும் கேள்வி நேரத்தின்போது தி.மு.க., - எம்.பி., சிவா பேசுகையில், “தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகள் பெரிய அளவில் உள்ளன. ''மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் வெகு தீவிரமாகவும் சிறப்பாகவும் இருந்தபோதிலும், அது மட்டுமே போதாது என்ற நிலை உள்ளது. எனவே, வெள்ள நிவாரண நிதியாக 2,000 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க வேண்டும்,” என்றார்.மதியத்துக்கு மேல் நடந்த அலுவல்களின்போது அமளி ஏற்படவே, ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.லோக்சபாவில் அலுவல்கள் துவங்கிய சில நிமிடங்களிலேயே அனல் பறந்தது. காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறித்து, பா.ஜ. - எம்.பி.,க்கள் அவதுாறான வகையில் பேசியுள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை தேவை,” என்றார்.

ஒத்திவைப்பு

பா.ஜ., - எம்.பி.,க்கள் சம்பித் பத்ரா மற்றும் நிஷிகாந்த் துபே ஆகிய இருவருக்கும் எதிராக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இதற்கு, பா.ஜ., எம்.பி.,க்கள் பதிலடி தரத் துவங்கினர்.சபையில் கடும் வாக்குவாதம் எழுந்ததும், சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் சபையை ஒத்திவைப்பதாக கூறி எழுந்து சென்றுவிட்டார்.மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியபோதும் அதே பிரச்னை கிளம்பவே, நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.முன்னதாக, காலை 10:30 மணிக்கு பார்லிமென்ட் நுழைவாயில் அருகே, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. தங்கள் வாயை மூடியிருக்கும் வகையில், முக கவசம் அணிந்தபடி அவர்கள் வந்திருந்தனர்.

'கஞ்சா வைத்தால் கூட தெரியாது'

குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:பார்லிமென்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதை முதல்முறையாக கேள்விப்படுகிறேன். எப்போது சபைக்கு சென்றாலும், என்னிடம் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே இருக்கும்.நேற்று முன்தினம் மதியம் 12:57க்கு சபைக்குள் சென்றேன். 1:00 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அரைமணி நேரம் கேன்டீனில் அமர்ந்துவிட்டு, 1:30 மணிக்கு திரும்பிவிட்டேன்.சபைக்குள் மொத்தம் மூன்று நிமிடங்களும், பார்லிமென்ட் வளாகத்திற்குள் அரை மணி நேரமும் மட்டுமே நேற்று முன்தினம் இருந்தேன்.இதுபோன்ற பிரச்னைகள் கூட அரசியலாக்கப்படுவது வினோதமாக உள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் செய்வது, குற்றம் சுமத்துவது நம் தராதரத்தை குறைத்து மதிப்பிட வைக்கும்.யார் வேண்டுமானாலும் எம்.பி.,க்கள் இருக்கைக்கு வந்து, என்ன வேண்டுமானாலும் வைத்துவிட்டு செல்லலாம் என்பது குறித்து நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.எம்.பி.,க்களின் இருக்கையைச் சுற்றி முள்வேலியோ அல்லது கண்ணாடியால் ஆன தடுப்பு அறைகளோ அமைக்கப்பட வேண்டும். அதை எம்.பி.,க்கள் பூட்டிவிட்டு சென்றால், யார் வேண்டுமானாலும் வந்து கஞ்சாவோ, ரூபாய் நோட்டுகளோ வைத்து விட்டு செல்வதை தடுக்க முடியும்.இந்த விவகாரத்தின் அடி ஆழம் வரை சென்று விசாரணை நடத்த, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பது வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

kumarkv
டிச 07, 2024 20:49

அவர் சும்மா அடை காத்தார். துட்டு அவரது அல்ல.


அப்பாவி
டிச 07, 2024 10:50

தத்திகள், அசடுகள். எந்த பதவிக்கும் தகுதியற்றவர்கள். ஆனால் ஆளப்பிறந்தவர்கள்.


பாமரன்
டிச 07, 2024 09:38

ரொம்ப சின்னப் புள்ளத்தனமானது ஜெகதீப் தங்கர் வேலை... சபை முழுவதும் சிசிடிவி பாதுகாப்பு கொண்டுள்ளது... அவ்வளவு பாதுகாப்பான இடத்துக்கு ஸ்கேனர் மூலம் மட்டுமே பிரதமர் ஜனாதிபதி போன்றோர் தவிர மற்றவர்கள் வரமுடியும். கட்டுக்கட்டாக பணத்தை ஜேபியில் எடுத்து வர முடியாது. எதோ ஒரு பையில் தான் வந்திருக்கும்... ரெக்கார்ட்ஸ் பார்த்தால் ஈசியா கண்டுபிடிச்சிடலாம்... இது எதிரிகட்சியினரின் ப்ரொடஸ்ட்களை மடைமாற்ற முயன்ற முட்டாள்தனமான நகர்வு. பல்பு வாங்கியது தான் மிச்சம்...


எவர்கிங்
டிச 07, 2024 09:28

யார் வாய்க்குள் போக வேண்டிய தோ?


sankar
டிச 07, 2024 09:26

கேள்வி கேட்க யாராவது கொடுத்து இருப்பாங்க


Barakat Ali
டிச 07, 2024 08:59

நோட்டுக்கட்டுகள் அங்கே எப்படி வரலாம் ???? உள்ளே நுழையும் எம்பி க்களை பரிசோதித்து அனுப்பும் வழக்கம் ஏன் நடைமுறையில் இல்லை ???? ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டனர் ....


kumarkv
டிச 07, 2024 21:21

ஏன் நோட்டுக்களை கொண்டுவரக்கூடாது. ஆயுதங்களைதான் அனுமதிக்க மாட்டாகள்


hariharan
டிச 07, 2024 08:24

எந்த ஒரு அரசு ஊழியரும் லாபம் ஈட்டும் வேறு எந்த தொழிலும் செய்யக்கூடது என சட்டம் இருக்கிறது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் இந்த சட்டம் பொருந்தாதாம். சட்டம் இயற்றுபவர்களே இவர்கள் தானே. அது என்ன சட்டத்தில் பாரபட்சம்? இந்த மனிதர் ஒரு மணி நேரம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல சில லட்ச்சங்கள் சம்பளமாக வாங்குவதாகக் கேள்வி. இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்து உச்ச நீதிமன்றத்தில் யாரும் வழக்கு தொடுக்க மாட்டார்களா?


ஆரூர் ரங்
டிச 07, 2024 10:23

வேறு வேலையே பார்க்கக் கூடாது என்றால் அடுத்த தேர்தலை வெறுங்கையுடனா சந்திக்க முடியும்? எம்பி க்கள் அரசு ஊழியர்களல்ல. அமைச்சர்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் உண்டு.


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 08:01

இவர் மூத்த அரசியல்வாதி வழக்கறிஞர் கூட. ஆனால் மாட்டிக்கொண்டு உள்ளார். இப்போது கதை சொல்கிறார்.


Kasimani Baskaran
டிச 07, 2024 07:37

புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் திடீர் என்று செல்லாது என்று சொல்ல வாய்ப்புண்டு. அதனால்தான் 500 ரூபாயாக வைத்திருந்தார். இதைப்போய் பெரிது படுத்தலாமா? பாராளுமன்றத்தை முடக்க இவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.


அனுஜா
டிச 07, 2024 06:20

நேத்திக்கி கட்டு கட்டாய் பணம் சிக்கியதுன்னு செய்தி வந்தது. இன்னிக்கி ஒரே ஒரு கட்டுதான் சீட்டுக்கு அடியில் சிக்கியதுன்னு செய்தி. மேலவை செய்தியிலேயே உண்மைத்தன்மை இல்லை. இவிங்களை வேற விஷயத்தில் எப்பிடி நம்புறது?


புதிய வீடியோ