உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தாக்குதலுக்கு உதவினேன்: விசாரணையில் ஒப்புக்கொண்ட ராணா

மும்பை தாக்குதலுக்கு உதவினேன்: விசாரணையில் ஒப்புக்கொண்ட ராணா

புதுடில்லி:'மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய நபராக அங்குதான் இருந்தேன்' என, முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணா ஒப்புக்கொண்டுள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர்.

குற்றச்சாட்டு

இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர். பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும் உதவியதாக, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா, மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த ஏப்ரலில் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளின் பொறுப்பில், அவர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரிடம் என்.ஐ.ஏ., மற்றும் மும்பை 'கிரைம் பிராஞ்ச்' அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்திய விசாரணையில், மும்பை தாக்குதலின் போது, அவர் அங்கு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். நோட்டம்விசாரணையில் அவர் கூறியதாவது:பாகிஸ்தானின் ராணுவ மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்த பின், அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றினேன். 2005ம் ஆண்டு முதல் மும்பையில் தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு உதவும் வகையில், அடிக்கடி இந்தியா வந்து நோட்டமிட்டேன். டில்லி, மும்பை, புனே, கோவா ஆகிய நகரங்களுக்கு சென்று நோட்டமிட்டேன். தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி ஹெட்லியுடன் ஆலோசனை செய்தேன். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உட்பட தாக்குதல் நடத்தப்பட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் காண ஹெட்லிக்கு உதவினேன். கடந்த, 2008ல் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து, நவம்பரில் மும்பை வந்தேன். தாக்குதல் நடந்த அன்றைய தினம் மும்பையில் தான் இருந்தேன். லஷ்கர் - இ - தொய்பா, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் டேவிட் ஹெட்லி இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. துவக்கத்தில் லஷ்கர் அமைப்பு, ஒரு உளவு வலையமைப்பாக செயல்பட்டது. அந்த அமைப்பு வழங்கிய பயங்கரவாத பயிற்சிகளில் பலமுறை பங்கேற்றுள்ளேன்.வளைகுடா போரின்போது, பாக்., உளவாளியாக சவுதி அரேபியாவில் பணியமர்த்தப்பட்டேன். அந்நாட்டு ராணுவத்தின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தேன். உடல்நிலை சரியில்லாததால், பாக்., ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார். நீட்டிப்புமும்பை தாக்குதலில் முக்கிய பங்கிருப்பதை ராணா ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளையும் அவர்கள் துவங்கியுள்ளனர். ராணாவின் நீதிமன்ற காவல் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ