விதான் சவுதாவில் பலாத்காரம்: முனிரத்னா மீது புகார்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையான விதான் சவுதாவிலும், அரசு காரிலும் வைத்து தன்னை பலாத்காரம் செய்தார் என்று, முனிரத்னா மீது புகார் அளித்த பெண் வாக்குமூலம் அளித்து இருப்பதாக 'பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது சிறப்பு புலனாய்வு குழு காவலில் உள்ளார். பலாத்கார புகார் அளித்த பெண், முனிரத்னா தன்னை அவரது குடோன், ராம்நகரில் உள்ள சொகுசு விடுதியில் வைத்து பலாத்காரம் செய்ததாக, புகாரில் கூறி இருந்தார்.தங்கள் காவலில் இருக்கும் முனிரத்னாவிடம், பெண் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரித்த போது, பெண் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறி இருக்கிறார்.இந்நிலையில் புகார் அளித்த பெண்ணிடம், போலீசார் நடத்திய விசாரணையின் போது, 'குடோன், சொகுசு விடுதியில் வைத்து மட்டும், என்னை பலாத்காரம் செய்யவில்லை. சட்டசபையான விதான் சவுதாவில் உள்ள அவரது அறை, அரசு காரில் வைத்தும் பலாத்காரம் செய்தார்' என்று, பகீர் வாக்குமூலம் அளித்து இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.பெண் அளித்த வாக்குமூலத்தால், முனிரத்னாவுக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை விதான் சவுதாவை சுத்தப்படுத்த போவதாக கூறி, அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் வந்தனர். அவர்களை வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன், காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக துாக்கி சென்று, வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். இதற்கு மத்தியில் காங்கிரசார் அழைத்து வந்த அர்ச்சகர், நுழைவு வாயில் பகுதியில் பூஜை செய்து, தீர்த்த தண்ணீரை தெளித்தார்.அரசின் அதிகார மையமாக இருக்கும் விதான் சவுதா அருகே, விதான் சவுதா கட்டடம் உள்ளது. விதான் சவுதாவில் அறை கிடைக்காத அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, இங்கு அறைகள் ஒதுக்கப்படும். பா.ஜ., ஆட்சியில் முனிரத்னா, தோட்டக்கலை துறை அமைச்சராக இருந்தார். அவரது அலுவலகம் விதான் சவுதாவில் இருந்தது. அந்த அலுவலகத்தில் வைத்து, பலாத்காரம் நடந்ததாக பெண் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.