| ADDED : அக் 24, 2025 06:58 AM
பெங்களூரு: பெங்களூரு அணி விற்பனைக்கு வருகிறது. 17,859 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அணியை வாங்க ஆறு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பை வென்றது. பின் பெங்களூருவில் நடந்த பாராட்டு விழா கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு அணியை நிர்வகிக்கும் 'டியாஜியோ குழுமம்' தன் அனைத்து பங்குகளையும் விற்க தயாராக உள்ளதாக, தகவல் வெளி வந்துள்ளது. ஆண்டுதோறும் அணிக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பந்தய விளையாட்டு செயலிகள் மீது சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதால், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் முழு பங்கையும் விற்க முடிவு செய்துள்ளது. டியாஜியோ பெங்களூரு அணியின் சந்தை மதிப்பு, 17,859 கோடி ரூபாய். இந்த பங்கை வாங்க டில்லி கேபிடல்சின் தற்போதைய இணை உரிமையாளரான பர்த் ஜிந்தால் (ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம்); அதானி குழுமம்; ஆதர் பூனம்வாலா (சீரம் இன்ஸ்டிடியூட்); புதுடில்லியை சேர்ந்த நிறுவனம், இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில், ஜிந்தால், அதானி குழுமம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.