உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசலில் 11 பேர் பலி ஆர்.சி.பி., தான் நேரடி காரணம்

கூட்ட நெரிசலில் 11 பேர் பலி ஆர்.சி.பி., தான் நேரடி காரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் பலியானதற்கு ஆர்.சி.பி., அணி நிர்வாகம், நிகழ்ச்சியை நடத்திய டி.என்.ஏ., நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தான் நேரடி காரணம்' என, ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., கோப்பையை ஆர்.சி.பி., அணி வென்றதை கொண்டாட, கடந்த மாதம் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல்வர் சித்தராமையாவிடம், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிக்கையை சமர்பித்தார். இந்நிலையில், அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன் விபரம்:ஆர்.சி.பி., அணி ஜூன் 3ம் தேதி ஐ.பி.எல்., இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, முதல்முறை கோப்பையை கைப்பற்றியது.

79 போலீசார்

அதற்கு மறுநாளே சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்த ஆர்.சி.பி., நிர்வாகம், விழாவை நடத்த நியமிக்கப்பட்ட டி.என்.ஏ., நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் ஏற்பாடு செய்தன. இவ்வளவு குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று அவர்களுக்கு தெரிந்தும், நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.பாராட்டு விழாவுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யவில்லை. விரிவான போலீஸ் பாதுகாப்பு இல்லை. மைதானத்திற்கு எவ்வளவு ரசிகர்கள் வருவர் என்பதை கணிக்க உளவுத்துறை, ஆர்.சி.பி., நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தவறி விட்டனர். மைதானத்திற்குள் வெறும் 79 போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வசதி

வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் இல்லை. சரியான ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. மாலை 3:25 மணிக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், நகர போலீஸ் கமிஷனருக்கே மாலை 5:30 மணிக்கு தான் தகவல் கிடைத்துள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர் மாலை 4:00 மணிக்கே மைதானத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்தும், சரியான தகவல் யாருக்கும் செல்லவில்லை.ஆர்.சி.பி., நிர்வாகம் தன், 'எக்ஸ்' பக்கத்தில், வீரர்கள் திறந்த பஸ்சில் பேரணியாக அழைத்து செல்லப்படுவர் என்று பதிவிட்டதே, கூட்டம் அதிகரிக்க காரணம்.இலவச பாஸ் அறிவிப்பும் கூட்டம் கூட வழிவகுத்து உள்ளது. ஆர்.சி.பி., - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் போலீஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. கூட்டத்தை எப்படி நிர்வகிப்பது என்பதற்கான தெளிவான வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்துள்ளது.கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானதற்கு ஆர்.சி.பி., அணி நிர்வாகம், டி.என்.ஏ., நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தான் நேரடி காரணம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
ஜூலை 13, 2025 08:56

all are equal humans. if a person thinks that a celebrity is higher then it is inferiority complex. general public attraction towards celebrities have severe inferiority complex


Kasimani Baskaran
ஜூலை 13, 2025 06:37

காவல்துறை எந்தவித கூட்டுக்கட்டுப்பாட்டையும் செய்யவில்லை.