கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை உயர்த்த பரிந்துரை!: அரசுக்கு பார்லிமென்ட் குழு வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மத்திய பட்ஜெட்களில் கல்விக்கான ஒதுக்கீட்டை தற்போதுள்ள 4 சதவீதத்தில் இருந்து, குறைந்தபட்சம் 6 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு சமீபத்தில் விரிவான அறிக்கை ஒன்றை பார்லிமென்டில் தாக்கல் செய்தது. காங்கிரசைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான திக்விஜய் சிங் தலைமையிலான இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2020ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கல்விக்கான ஒதுக்கீடு, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேர்மையான முயற்சி
அதே நேரத்தில், 2021 - 2022 நிதியாண்டில், 4.12 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கல்விக் கொள்கையின் பரிந்துரையைவிட மிகவும் குறைவாகும்.'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பூடான், 2022ல் 7.47 சதவீதம், மாலத்தீவுகள் 4.67 சதவீதம் கல்விக்காக ஒதுக்கியுள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போதும், இது குறைவு. அதனால், கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் செலவிடும் தொகையை, ஜி.டி.பி.,யில், 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.மத்திய, மாநில அரசுகள், இந்த விஷயத்தில் நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து கூடுதல் நிதியை கேட்டுப் பெற வேண்டும்.பொதுக்கல்வி முறையை, அதாவது பள்ளிக்கல்வியில் இருந்து உயர்கல்வி வரை அனைவரும் அணுகும் வகையில் மேம்படுத்த, இந்தக் கூடுதல் நிதி தேவை.கடந்த சில ஆண்டுகளாகவே, கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, ஜி.டி.பி., விகிதத்தில் பார்க்கையில் மிகவும் குறைவாகவே உள்ளது. நடவடிக்கை
கடந்த, 2014 - 2015ல், 4.07 சதவீதம், 2015 - 2016ல் 4.2 சதவீதம், 2016 - 2017ல் 4.24 சதவீதமாக இருந்துள்ளது. இதுவே, 2017 - 2018ல் 3.87 சதவீதமாகவும், 2018 - 2019ல் 3.9 சதவீதமாகவும், 2019 - 2020ல் 4.04 சதவீதமாகவும் குறைந்தது.கடந்த, 2020 - 2021ல் 4.36 சதவீதமாக உயர்ந்த நிலையில், 2021 - 2022ல் 4.12 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால், ஜி.டி.பி., சதவீதத்தில் பார்க்கும்போது, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை, 6 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும்.அதுபோல் நாடு முழுதும், டாப் - 10 மத்திய பல்கலைகளில், துணை வேந்தர் இல்லாமல், பொறுப்பு துணை வேந்தர்களே உள்ளனர். இவ்வாறு காலியாக உள்ள பல முக்கிய பதவிகளை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம்
பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, சட்டம் மற்றும் நீதித்துறைகளுக்கான பார்லிமென்ட் குழு, அறிக்கை ஒன்றை பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யான பிரிஜ் லால் தலைமையிலான இந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு மற்ற துறைகளில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்படுகின்றனர். மாநில போலீஸ் உள்ளிட்டவற்றில் ஆள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், சி.பி.ஐ.,க்கு அதிகாரிகளை அனுப்புவதில் சுணக்கம் ஏற்படுகிறது.இதனால், சி.பி.ஐ.,க்கு என, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்களை, பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக அல்லது, சி.பி.ஐ.,க்கு என, தனியாக தேர்வு நடத்தி, தேவையான அதிகாரிகளை தேர்வு செய்யலாம்.அதுபோல, சைபர் குற்றம், தடயவியல், நிதி மோசடி, சட்டம் போன்றவற்றில் நிபுணர்களை நேரடியாக சி.பி.ஐ.,க்கு தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.தற்போது, மாநிலங்களில் விசாரணை நடத்துவதற்கு, அந்த மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்தாத வகையில், இந்த விஷயத்தில் தனியாக ஒரு சட்டம் அல்லது நடைமுறையை உருவாக்க வேண்டும். அதாவது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், சி.பி.ஐ., விசாரணை செய்வதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்பதை ஏற்படுத்த வேண்டும்.சி.பி.ஐ.,யின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அது விசாரிக்கும் வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை, அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், ஆண்டறிக்கைகளையும் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.- நமது சிறப்பு நிருபர் -