உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்... பயங்கரவாதம் தான்!: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மத்திய அரசு

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்... பயங்கரவாதம் தான்!: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் காரை வெடிக்கச் செய்து, 12 பேர் உயிரிழக்க காரணமான சம்பவத்தை கொடூரமான பயங்கரவாத தாக்குதல் என, மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் விதமாக, நம் நாட்டில் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் அன்சர் கஸ்வாதுல்ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. அதே வேளையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, ஜம்மு - காஷ்மீரில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. அதை ஒட்டிய அம்மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது. இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார். இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பூட்டானில் இருந்து பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பியதும், நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், பிரதமர் தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்குவதற்கு முன், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்: டில்லி செங்கோட்டை அருகே கடந்த, 10ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது போன்ற பயங்கரவாத செயல்களை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் உள்ளோம். தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உரிய நேரத்தில், விரைவாக வந்து உதவிய டாக்டர்கள், பாதுகாப்பு படையினருக்கு நன்றி. கடினமான நேரத்தில் உறுதுணையாக நின்ற அனைத்து நாடுகளுக்கும் நன்றி. இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டப்படும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தருவது உறுதி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மதபோதகர் கைது ஹரியானாவின் பரிதாபாதில் வெடி பொருட்களை பதுக்க உதவிய மதபோதகர் மவுல்வி இஷ்தியாக் என்பவரை, ஜம்மு - காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். பரிதாபாதின் அல் பலாஹ் பல்கலை அருகே இவர் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் இருந்து தான், 2,500 கிலோ வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தமாக, 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில், 360 கிலோ அமோனியம் நைட்ரேட் என்பது தெரிய வந்துள்ளது. பல்கலை விளக்கம் 'டில்லி பயங்கரவாத தாக்குதலில் கைதான இரு டாக்டர்களுக்கும், தங்களது நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என, பரிதாபாதில் இயங்கி வரும் அல் பலாஹ் பல்கலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: டில்லியில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. இதற்கு மிகுந்த கண்டனம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கைதான இரு டாக்டர்களுக்கும், எங்கள் பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. டாக்டர்களாக இங்கு அவர்கள் பணியாற்றியதுடன் சரி, அதற்கு மேல் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில், விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எத்தனை பேர் கைது? டில்லி பயங்கரவாத தாக்குதல் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். அவர்களின் விபரம்: டாக்டர் ஆதில் - குல்காம், ஜம்மு - காஷ்மீர் டாக்டர் முஸாம்மில் - புல்வாமா, ஜம்மு - காஷ்மீர் டாக்டர் ஷாஹீன் சயீத் - லக்னோ, உ.பி., ஆரிப் நிஸார் தர் - நவ்காம், ஜம்மு - காஷ்மீர் யாசிருல் அஷ்ரம் - நவ்காம், ஜம்மு - காஷ்மீர் மக்சூத் அஹமது தர் - நவ்காம், ஜம்மு - காஷ்மீர் மவுல்வி இர்பான் அகமது - சோபியான், ஜம்மு - காஷ்மீர் ஜமீர் அஹமது - கந்தர்பால், ஜம்மு - காஷ்மீர் மவுல்வி இஷ்தியாக் - மேவாத், ஹரியானா ஜன., 26லேயே தாக்குதல் நடத்த சதி! செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய டாக்டர் உமரும், கைதான டாக்டர் முஸாம்மிலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் செங்கோட்டையில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராக்கள், டாக்டர் முஸாம்மில் அகமதுவின் மொபைல் போனில் பதிவான தகவல்கள், மேலும், அவர்கள் எங்கெல்லாம் சென்றனர் என்பதை மொபைல் போன் டவர்களில் பதிவான தரவுகளை வைத்து ஆராய்ந்தனர். அப்போது, ஜனவரியில் நடந்து முடிந்த குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில், இருவரும் பலமுறை செங்கோட்டை பகுதியில் உளவு பார்த்தது தெரிய வந்தது. சதித் திட்டத்தை அரங்கேற்ற, எந்த பகுதியில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது; மக்கள் நடமாட்டத்தின் அடர்த்தி ஆகியவை குறித்து இருவரும் உளவு பார்த்ததாக போலீசார் தெரிவித்தனர். * துருக்கி பயணம் மேலும், இருவரும் துருக்கி சென்று திரும்பியதும், அவர்களது பாஸ்போர்ட்களை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது. இதனால், இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியை சந்தித்தனரா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ