புதுடில்லி: சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்., - நவ., மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹார் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள, கடந்த மாதம் 24ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. கடும் கண்டனம்
'ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.இதன்படி, பீஹார் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவுக்கு, பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'கடைசியாக 2003ல், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. அதை முடிக்க இரண்டு ஆண்டுகளாகின. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த பணிகளை முடிப்பது எப்படி சாத்தியம்?' என கேள்வி எழுப்பினார். ஆனால், பீஹாரில் ஆளும் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் தேர்தல் கமிஷனின் உத்தரவை வரவேற்றனர்.இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் முதலில் மனு தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் குமார் ஜா, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா, சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்தனர். ஓட்டுரிமை
அந்த மனுக்களில், 'தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -- 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை மீறுகிறது. இந்த உத்தரவு தன்னிச்சையானது. தகுதியுள்ள பல லட்சம் வாக்காளர்களின் ஓட்டுரிமையை இது பறிக்கக் கூடும். 'இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும், பிற மாநிலங்களில் தேர்தல் கமிஷன் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்படிருந்தன.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி வாதிடுகையில், 'பீஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ள நிலையில், அந்த கால கட்டத்துக்குள், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முடிக்க முடியாது. 'தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவால், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். 'பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மிகவும் பாதிக்கப்படுவர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றனர்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டனர்.எனினும், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். வழக்கு, வரும் 10ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எப்படி நடக்கும் தீவிர திருத்த பணி?
சிறப்பு தீவிர திருத்த பணி என்பது, வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் ஒரு விரிவான நடவடிக்கை. பீஹாரில் இந்த பணியில், 98,498 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஓட்டுச் சாவடி முகவர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பர். மிக முக்கியமாக, 2003-க்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள், இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், பெற்றோரின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் இல்லாவிட்டால், வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அப்பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர் முடிவு எடுப்பார்.