உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர்களின் செயல்பாடு குறித்து அறிக்கை தாங்க! சிவகுமாருக்கு காங்., மேலிடம் உத்தரவு

அமைச்சர்களின் செயல்பாடு குறித்து அறிக்கை தாங்க! சிவகுமாருக்கு காங்., மேலிடம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த பின், காங்கிரஸ் மேலிடம் உஷாராகி உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு குறித்து அறிக்கை கொடுங்கள் என்று, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், அமைச்சர்கள் மாற்றப்படுவரா என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் அமைச்சர்கள் மீது, ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவுக்கு, முடா வழக்கு தற்போது தலைவலியாக மாறி உள்ளது. சட்டவிரோதமாக மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்தது தொடர்பாக, முதல்வர் மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் விலக அவர் மறுக்கிறார். மேலிடத்தின் ஆதரவு தனக்கு உள்ளது என்றும் கூறுகிறார்.

பதவிக்கு 'துண்டு'

ஆனாலும், 'பிளான் பி'யை செயல்படுத்த, மேலிடம் முடிவு செய்து உள்ளது. அதாவது சித்தராமையாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கவும், மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல்வர் பதவிக்கு துணை முதல்வர் சிவகுமார், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வரிசைகட்டி நிற்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்ற, சதீஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து, முதல்வர் பதவிக்கு, 'துண்டு' போட்டு வந்துள்ளார். இதன்மூலம் சித்தராமையா எந்த நேரத்திலும் பதவியில் இருந்து இறக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கூடிய விரைவில் மேலிட தலைவர்களை, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கவும், ராகுல் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், முதல்வர் பதவியை தக்கவைக்க, சித்தராமையாவும் அனைத்து முயற்சிகளும் செய்கிறார். நேற்று முன்தினம் ராய்ச்சூர் சிந்தனுாரில் நடந்த பொது கூட்டத்தில், ''அஹிந்தா சமூகத்திற்கு ஆதரவாக இருப்பதால், என் மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.எனது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்தார். அவரது மகனான நான் இரண்டாவது முறை, முதல்வராக இருப்பதை, எதிர்க்கட்சிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை,'' என்றார்.

பதவி பறிப்பு?

இந்நிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், ரகசிய கூட்டங்கள் நடத்துவதாகவும், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் கட்சி மேலிடத்திற்கும் புகார் சென்றது. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்து, அறிக்கை கொடுங்கள் என்று, துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சிவகுமாருக்கு, மேலிடம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவரும் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். இந்த அறிக்கையின் அடிப்படையில், சில அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கபடலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பீதி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், '' அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகள் குறித்து, கட்சி மேலிடம் அறிக்கை கேட்டு இருப்பது உண்மை தான். இதனால் யாரும் பீதி அடைய வேண்டாம். அறிக்கை கேட்பது இயல்பு தான். நான் தலைவராக இருந்த போதும், கட்சி தலைவர்கள் செயல்பாடு பற்றி அறிக்கை அளித்து உள்ளேன்,'' என்றார்.கட்சி மேலிடத்திடம் சிவகுமார் அறிக்கை அளிக்கும்போது, தனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது புகார் அளிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
அக் 07, 2024 07:57

மொத்தத்தில் இவர்கள் ஆட்சியில் எந்த வேலையும் ஏ செய்ய வில்லை. பெங்களூர் சாலைகள் மிக கேவலமான நிலையில் உள்ளது.. மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். இதுதான் காங்கிரஸின் சாதனை


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 07, 2024 06:17

பெத்த ராமையாவின் பல்பை பிடுங்க இருக்காங்களோ கான் க்ராஸ் மேலிடம் ? . இதுதான் ரெங்குடுவின் பெரிய டவுட்டு ப்பா . எதுக்கும் உங்க பரமரசிகர் கொசுத்தொல்லை நா ரா மு கிட்ட கேட்டுக்கின்னு முடிவு எடுக்கவும்


Kasimani Baskaran
அக் 07, 2024 05:29

வேறு உருப்படியான வேலை இல்லாததால் கார்கே கர்நாடகாவின் பிரதமராக பதவியேற்பார். சித்தராமைய்யாவும் முதல்வராக தொடர்ந்து இருப்பார். கர்னாடக காங்கிரஸ் நிர்வாகத்தில் ஏராளமான கோமாளிகள் இருக்கிறார்கள். ராகுல் தலைமையேற்று கோமாளிகளை வழிநடத்துவார். மொத்தத்தில் பொருளாதார முக்கியத்துவம் நிறைந்த கர்னாடகாவை குப்பைக்கு கொண்டு செல்லாமல் இருந்தால் நல்லது.


முக்கிய வீடியோ