அர்ஸ் மருத்துவக் கல்லுாரியிடம் வரி பாக்கி வசூலிக்க கோரிக்கை
பெங்களூரு: ''கோலார் டமக்காவில் உள்ள தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லுாரி, நகராட்சிக்கு சொத்து வரி 11 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதை வசூலிக்க வேண்டும்,'' என்று மேலவையில் ம.ஜ.த., - எம்.எல்.சி., கோவிந்தராஜ் வலியுறுத்தினார்.கர்நாடக சட்ட மேலவையில், அவர் பேசியதாவது:கோலார் டமக்காவில், அர்ஸ் எஜூகேஷன் டிரஸ்ட் நடத்தி வரும் தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், 2002 முதல் 2024 வரை, சொத்து வரி நகராட்சி ஊழியர்கள் வரி வசூலிக்க சென்றால் மிரட்டி அனுப்பி விடுகின்றனர்.எனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த அரசு தான் உத்தரவிட வேண்டும். கோலார் நகராட்சி, 2020 அக்டோபர் 19ல், இந்த நிறுவனத்திற்கு வரி செலுத்த நோட்டீஸ் கொடுத்தது.இதற்கு அவர்கள் பதில் அறிக்கையில், 'இது தேவராஜ் அர்ஸ் பெயரில் இயங்கும் கல்வி அறக்கட்டளை. கல்வி தொடர்பான கட்டடங்களுக்கு வரி கட்ட முடியாது. இதற்கு நீங்கள் தான் சலுகை அளிக்க வேண்டும். நகராட்சியில் இருந்து எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்ததே இல்லை. எனவே, நாங்கள் வரி செலுத்துவதாக இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.மறுபடியும் கோலார் கலெக்டர் உத்தரவின்படி, சொத்து வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும், 11 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. இதில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லுாரி, அறக்கட்டளைக்கு உட்பட்டது என்கின்றனர். அங்கு, எத்தனை பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. எத்தனை மாணவர்களுக்கு இலவச மெடிக்கல் சீட் வழங்கப்பட்டது என்பதை அவர்கள் அறிவிக்கவேண்டும்.கொரோனா நேரத்தில் சிகிச்சை அளிக்க அரசிடம் இருந்து நோயாளிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் பல லட்சம் ரூபாய் இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. அரசின் எல்லா சலுகையும் பெற்றுக் கொண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.