உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு அந்தஸ்து ரத்தானதை எதிர்த்து தீர்மானம்; ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கூட்டத்தின் முதல் நாளே கடும் அமளி

சிறப்பு அந்தஸ்து ரத்தானதை எதிர்த்து தீர்மானம்; ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கூட்டத்தின் முதல் நாளே கடும் அமளி

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் சட்டசபை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக நேற்று கூடிய நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதால், கடும் அமளியை சந்தித்தது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2010ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து

இதில் ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின், சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியதும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் ரஹீம் ராத்தர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.அப்போது மக்கள் ஜனநாயகக் கட்சியின் வஹீத் பாரா, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.''மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வலியுறுத்தி, இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என, பாரா குறிப்பிட்டார்.

வலியுறுத்தல்

இதற்கு, பா.ஜ.,வின் 28 எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ''சட்டசபை விதிகளை மீறி, தீர்மானம் தாக்கல் செய்த பாராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,'' என, பா.ஜ.,வின் ஷாம் லால் சர்மா வலியுறுத்தினார்.''இந்த தீர்மானம் என்னுடைய பார்வைக்கு வரவில்லை. அவ்வாறு வரும்போது அது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, சபாநாயகர் ராத்தர் குறிப்பிட்டார்.இதில் திருப்தியடையாத பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.இதையடுத்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உரையாற்றுவார் என்று சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து, பா.ஜ.,வினர் அமைதியாயினர்.சட்டசபையில் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவரும், முதல்வருமான ஒமர் அப்துல்லா பேசியதாவது:

'அரசியல் பேச விரும்பவில்லை'

இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை. மொத்த சபையின் சார்பில் பேசுகிறேன். இந்த சட்டசபை, ஜம்மு - காஷ்மீர் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இந்த பிரச்னை குறித்து ஒரு தனி எம்.எல்.ஏ.,வால் மட்டும் முடிவு செய்ய முடியாது. இந்த தீர்மானத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அது கேமராவுக்காக, விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது.வரும் நாட்களில், இந்தப் பிரச்னை தொடர்பாக அனைத்து தரப்பினருடன் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் விதிகளை தெரிந்து, நடந்து கொள்ள வேண்டும். முதல் நாளிலேயே விதியை மீறுவதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது அளித்த பேட்டியில், 'சிறப்பு அந்தஸ்தை பா.ஜ., மீண்டும் அளிக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பிறகே இது சாத்தி யமாகும்' என, ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 05, 2024 05:48

சிறப்பு அந்தஸ்தை நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு - அதை ஒரு மாநில சட்டசபை எதிர்க்க முடியாது. முக்கால் நூற்றாண்டுக்கு மேல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 11% காஷ்மீருக்கு செலவு செய்ததைப்போன்ற கோமாளித்தனம் வேறு ஒன்றும் இல்லை. ஆகவே காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி - அவ்வளவே. தேவையில்லாமல் அலட்டிக்கொள்வதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


புதிய வீடியோ