தொகுதி பங்கீட்டில் இழுபறி… காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்ஜேடி!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டிருப்பது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ .,14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலையொட்டி ஜக்கிய ஜனதா தளம், பாஜ, உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனிடையே, இண்டி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், இண்டி கூட்டணியில் பெரிய கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில், 2வது கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியிலும், சந்திரசேகர் மாதேபூராவிலும், வீணா தேவி மோகமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.கடந்த 2020ம் ஆண்டு 144 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி, இந்த ஆண்டு ஒரு சீட் குறைவாக 143 இடங்களில் போட்டியிடுகிறது. ஏற்கனவே, பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தற்போது, முக்கிய கட்சிகளான காங்கிரஸ், ஆர்ஜேடி இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாறி மாறி வேட்பாளர்களை மட்டும் அறிவித்து வருவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.