சுப்ரீம் கோர்ட்டில் ரோஹிணி சிந்துாரி, ரூபா பிடிவாதம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரி, தன் மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா தாக்கல் செய்த மனுவை, திரும்ப பெற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான இருவரும், பரஸ்பரம் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.கடந்த சில ஆண்டுகளாகவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோஹிணி சிந்துாரி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொண்டனர். 2023ல் ரோஹிணி சிந்துாரியின், தனிப்பட்ட போட்டோக்களை, ரூபா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.தன் கவுரவத்தை குலைத்ததாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரூபா மீது, ரோஹிணி சிந்துாரி மான நஷ்டவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரூபா மனு தாக்கல் செய்திருந்தார்.மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அசானுதின் அமானுல்லா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ரூபாவும், ரோஹிணி சிந்துாரியும் ஆஜராகினர். விசாரணை துவங்கிய போது, வழக்கில் சமரசம் செய்து கொள்ள, மத்தியஸ்தரை நியமிக்கும்படி, ரூபா வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ரோஹிணி சிந்துாரி சம்மதிக்கவில்லை. நீதிமன்றத்திலேயே முடிவாக வேண்டும் என, பிடிவாதம் பிடித்தார்.அப்போது நீதிபதிகள், 'மூத்த அதிகாரிகளாக இருந்து கொண்டு இப்படி மோதுவது, ஆரோக்கியமான விஷயம் அல்ல. மத்தியஸ்துக்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. வழக்கின் தகுதி அடிப்படையில் முடிவு செய்ய வேண்டி வரும். இரண்டு அதிகாரிகளும் நேருக்கு நேர் பேச சம்மதமா' என, இருவரின் தரப்பு வக்கீல்களிடம் கேட்டனர்.இதற்கு ரூபா சம்மதித்ததால், இருவரும் பேசி சமரசம் செய்து கொள்ள, நீதிபதிகள் சிறிது நேரம் கால அவகாசம் அளித்து, விசாரணையை தள்ளி வைத்தனர். இருவரும் பேசி முடித்த பின், மீண்டும் விசாரணை ஆரம்பமானது. 'பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை' என, ரூபா தெரிவித்தார்.நீதிபதிகள், 'நேரம் ஏன் வீணானது, மத்தியஸ்தம் செய்து கொள்வதில் என்ன பிரச்னை' என கேட்டார். இதற்கு பதிலளித்த ரூபா, 'நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ரோஹிணி சிந்துாரி கூறுகிறார்.நீதிபதிகள், 'நீங்கள் மன்னிப்பு கேட்கலாமே. பிரச்னைக்கு தீர்வு காண, இது நல்ல வழிதானே' என கூறியது. இதற்கு சம்மதிக்காத ரூபா, 'இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.எனவே, 'பிரச்னையை கீழ் நீதிமன்றத்திலேயே தீர்த்து கொள்ளுங்கள்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே தன் மனுவை ரூபா, திரும்ப பெற்று கொண்டார். - நமது நிருபர் -