கோலார் மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடியில் திட்டம்
கோலார்: ''கோலார் மாவட்டத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்படும்,'' என, அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.'கர்நாடகா டெவலப்மென்ட் புரோகிராம்' எனும் கர்நாடக மேம்பாட்டு திட்டங்கள் குறித்த கூட்டம், கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில், நேற்று கோலார் ஜில்லா பஞ்சாயத்து அரங்கில் நடந்தது.எம்.எல்.ஏ.,கள் கொத்துார் மஞ்சுநாத், நஞ்சேகவுடா, வெங்கட் ஷிவா ரெட்டி, சம்ருத்தி மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில் குமார் ஆகியோரும், கலெக்டர் டாக்டர் ரவி உட்பட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடந்த கூட்டத்திற்கு பிறகு, பைரதி சுரேஷ் அளித்த பேட்டி:கோலார் மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டு பணிகளான பொதுப்பணித் துறையின் சாலைகள், கிராம சாலைகள், ஏற்படுத்த 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. தேவைப்பட்ட இடங்களில் குடிநீர் வசதி மேற்கொள்ளப்படும். விவசாயம், தோட்டக்கலைத்துறை அபிவிருத்திக்கும் கவனம் செலுத்தப்படும் .கல்வி நிலையங்களில் பழுதடைந்த 86 கட்டடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. கோலாரில் விஸ்வேஷ்வரய்யா விளையாட்டு திடல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெஹ்மான் நகரில் உருது பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்படும். நிலுவையில் உள்ள தொழிலாளர் சம்பளம் முழுமையாக வழங்கப்படும். கோலார் மாவட்டத்தில் விவசாயிகள், பெண்கள், மாற்று திறனாளிகள், ஏழைகள், மாணவர்கள் நலனுக்காக நல திட்ட உதவிகள் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும். இதற்காக கோலார் நகரில் பிரமாண்டமான மாநாடு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும். இதில் முதல்வர் சித்தராமையா பங்கேற்பார்.இவ்வாறு அவர் கூறினார்.தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இவர்கள் பெலகாவியில் நடக்கும், 'காந்தி பாரத்' மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.