| ADDED : ஏப் 05, 2025 02:21 AM
பெங்களூரு,: கர்நாடகாவில் நகை கடைக்கு பர்தா அணிந்து வந்த பெண்கள், 1.13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்றனர்.கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரின் மண்டிபேட்டில், 'ரவி ஜுவல்லர்ஸ்' என்ற நகை கடை உள்ளது. கடந்த வாரம் பர்தா அணிந்த சில பெண்கள் கடைக்கு வந்தனர். அப்போது கடை ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்றிருந்ததால், ஒரு ஊழியர் மட்டுமே இருந்தார்.அவரிடம் வெள்ளி டம்ளர் காட்டும்படி அப்பெண்கள் கூறினர். ஊழியரும் காட்டினார். அப்பெண்கள், 'புதிய டிசைன்களில் டம்ளர் வேண்டும்' என்றனர். ஊழியரும் வேறு டிசைன்களை எடுத்து வர, உள்ளே சென்றார்.அந்த நேரத்தை பயன்படுத்தி, அக்கும்பலில் இருந்த ஒரு பெண், தங்க ஜிமிக்கி, கம்மல் உட்பட 1.13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்த பெட்டியை எடுத்து, தன் பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டார்.அதன்பின் வெள்ளி டம்ளர்களை கொண்டு வந்த ஊழியரிடம், 'எந்த டிசைனும் பிடிக்கவில்லை' என கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டனர். உரிமையாளர், வாரம் ஒரு முறை எவ்வளவு நகைகள் விற்பனையாகின; எவ்வளவு மீதம் உள்ளன என்பதை கணக்கு பார்ப்பது வழக்கம். அதுபோன்று நேற்று முன்தினம் கணக்கு பார்த்த போது, 1.4 கிலோ தங்க நகைகள் குறைந்தன. இதன் மதிப்பு 1.13 கோடி ரூபாய்.கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்து வந்த பெண்களில் ஒருவர், நகை பெட்டியை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து, பசவநகர் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் புகார் செய்தார்.திருட்டு நடந்து ஒரு வாரம் ஆகி விட்டதாலும், அப்பெண்கள் பர்தா அணிந்திருந்ததாலும், அவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.