ஹெல்மெட் அணியாதவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்?
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில், ஹெல்மெட் அணியாதது மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிக்கு போக்குவரத்து போலீசார், 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். உ.பி.,யின் முசாபர்நகரைச் சேர்ந்தவர் அன்மோல் சிங். இவர் கடந்த 4ம் தேதி அங்குள்ள புதிய மண்டி பகுதிக்கு, தன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். மேலும் ஸ்கூட்டருக்கான உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை. 'இதன் காரணமாக ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீதை அவரிடம் நீட்டியுள்ளனர். அதை வாங்கி பார்த்த அன்மோல் சிங் ஆடிப்போனார். அவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் மதிப்பே, 1 லட்சம் ரூபாய் என்ற நிலையில், ரசீதில், 20 லட்சத்து, 74,000 ரூபாய் அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அவர் இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது குறித்து முசாபர்நகர் போக்குவரத்து எஸ்.பி., அளித்த விளக்கம்: அபராதம் விதித்த எஸ்.ஐ.,யின் தவறால் இந்த பிழை ஏற்பட்டது. அந்த வழக்கில் மோட்டார் வாகனச் சட்டத்தின், 207 பிரிவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், எஸ்.ஐ., 207க்குப் பின் 'எம்.வி., ஆக்ட்' என்று குறிப்பிட மறந்துவிட்டார். இதனால், '207' மற்றும் இந்தப் பிரிவின் குறைந்தபட்ச அபராதத் தொகையான, 4,000 ரூபாய் சேர்ந்து, 20,74,000 ஆகிவிட்டது. அது திருத்தப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.