உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை ரன்யா ராவ் உட்பட 4 பேருக்கு ரூ.270 கோடி அபராதம் விதிப்பு

நடிகை ரன்யா ராவ் உட்பட 4 பேருக்கு ரூ.270 கோடி அபராதம் விதிப்பு

பெங்களூரு; துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில், நடிகை ரன்யா ராவ் உட்பட நான்கு பேருக்கு, 270 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியும், சிவில் அமலாக்க இயக்குநரக டி.ஜி.பி.,யுமான ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ், 34; கன்னட நடிகை. கடந்த மார்ச் 3ம் தேதி இரவு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான, 14.80 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தார். அவரை, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவின் பெங்களூரு அதிகாரிகள் கைது செய்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். தங்கம் கடத்தியதில், ரன்யா ராவின் முன்னாள் காதலனும், தெலுங்கு நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, பல்லாரி தொழில் அதிபர்கள் ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், துபாயில் இருந்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்து, வரி செலுத்தாமல் மோசடி செய்தததற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்று, ரன்யா ராவ் உட்பட நான்கு பேரிடமும், சிறைக்கு சென்று டி.ஆர்.ஐ., அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். துபாயில் இருந்து இதுவரை, 127.3 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யாவுக்கு, 102.55 கோடி ரூபாயும்; 72.6 கிலோ தங்கம் கடத்திய தருண் கொண்டாரு ராஜுவுக்கு, 62 கோடி ரூபாயும்; தலா, 63.61 கிலோ தங்கம் கடத்திய ஷாகில் ஜெயின், பரத் ஜெயினுக்கு தலா, 53 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை, 270.55 கோடி ரூபாய். 'அபராத தொகையை செலுத்தாவிட்டால், உங்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்' என்றும், டி.ஆர்.ஐ., கொடுத்துள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 03, 2025 09:36

அந்த அளவுக்கு அபராதம் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இருக்கா? அப்படி என்ன பெரிய பணியில் இருந்தார்கள் அவர்கள் ...


jaya
செப் 03, 2025 11:15

தங்கம் கடத்தும் பணியில் தான்


V Venkatachalam
செப் 03, 2025 13:41

தங்கம் கடத்த பணியில் இருக்கணுமா? திருடனா அல்லது திருடியா இருந்தா போதாதா? அரசியல் வியாதிகள் தொடர்பு போதாதா?


சமீபத்திய செய்தி