கர்நாடக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,564 கோடி ஒதுக்கீடு
'மத்திய பட்ஜெட்டில், கர்நாடகாவின் ரயில்வே திட்டங்களுக்கென, 7,564 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.மத்திய பட்ஜெட் தொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டில்லியில் இருந்தவாறு காணொளிக் காட்சி மூலம், ஊடகத்தினரை சந்தித்தார்.ஹூப்பள்ளியில், தென்மேற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கே.எஸ்.ஜெயின், பெங்களூரில் டிவிஷனல் ரயில்வே மேலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:உள்கட்டமைப்பு, மேம்பாடு, புதிய ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கல், இணைப்பு மேம்படுத்துல், பயணியர் பாதுகாப்பு, வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு 2025 - 26ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், 2.65 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கர்நாடக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2024 - 25ல், 7,559 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டு 7,564 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் 2014 முதல் சராசரியாக ஆண்டுதோறும் 150 கி.மீ., துாரத்துக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே 2009 -14ல், 113 கி.மீ., வரை மட்டுமே அமைக்கப்பட்டன.அதுபோன்று, 2014 - 25 வரை ஆண்டுக்கு 294 கி.மீ., மின்மயமாக்கல் பாதை அமைக்கப்பட்டுள்ளன. 2009 -14ல், ஆண்டுக்கு 18 கி.மீ., மட்டுமே மின்மயமாக்கல் அமைக்கப்பட்டிருந்தன. கர்நாடகாவில் 96.5 சதவீதம் வழித்தடம், மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வேயின் பகுதிகளும் அடங்கும்.கர்நாடகாவில் மட்டும் 1,652 கி.மீ., துாரம் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் முழு ரயில்வே வலையமைப்பை விட அதிகம். தற்போது 31 திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், 47,016 கோடி ரூபாய் முதலீட்டில், 3,840 கி.மீ.,க்கு புதிய தண்டவாளங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. பயணியர் வசதிகளை மேம்படுத்த, கூடுதலாக 1,981 கோடி ரூபாய் முதலீட்டில், 61 அம்ருத் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.கர்நாடகாவில் 132 நிலையங்களில், ஆரம்பத்தில் 1,703 கி.மீ.,க்கு 'கவாச்' திட்டம் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 1,672 கி.மீ.,க்கு பணிகளுக்கு டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 644 ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.பயணியர் வசதிக்காக, 61 மின்துாக்கிகள், 43 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 335 ரயில் நிலையங்களில் 'வைபை' வசதி செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் 12 மாவட்டங்களில், 18 முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. கூடுதலாக 'அம்ருத் பாரத் விரைவு' ரயில், மால்டா டவுன் - பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது.துமகூரு ரயில் நிலையத்தை 88 கோடி ரூபாயில் புதுப்பிக்க, அடுத்த மாதம் 31ல் டெண்டர் கோரப்படும். பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் 485 கோடி ரூபாயிலும், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் 367 கோடி ரூபாயிலும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.