சினிமா தயாரிப்பாளர் மீது ரூ.9 கோடி மோசடி வழக்கு
பெங்களூரு,: திரைப்படம் தயாரிப்பதாக கூறி, தொழில் அதிபரிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்த, துளு மொழி சினிமா தயாரிப்பாளர் அருண் ராய் மீது வழக்கு பதிவாகி உள்ளது.தட்சிண கன்னடாவின் பன்ட்வாலை சேர்ந்தவர் வரதராஜ். தொழிலதிபரான இவர், விதை பதப்படுத்தும் ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2020ல் கொரோனா நேரத்தில் வரதராஜுக்கு தொழிலில் 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.அந்த நேரத்தில் துளு மொழியில் திரைப்படம் தயாரிக்கும், அருண் ராய் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது, 'வீர கம்பாலா என்ற பெயரில் படம் ரெடி செய்ய உள்ளேன். இப்படத்தை, நாம் இருவரும் சேர்ந்து இயக்குவோம்' என அருண் ராய் கூறியுள்ளார்.'டில்லியில் 400 கோடி ரூபாய்க்கு தொழில் செய்ய முதலீடு செய்துள்ளேன். தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த காளிசாமி என்பவரிடம் 50 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்கிறேன். ஜார்க்கண்ட் அரசின் பணிகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், வரதராஜை பெங்களூருக்கு அழைத்து வந்து எலக்ட்ரானிக் சிட்டி, ராஜாஜி நகர் ஆகிய இடங்களில் நிறைய கட்டடங்களை காண்பித்து, இந்த கட்டடங்கள் எனது பெயரில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.அருண் ராயை நம்பிய வரதராஜ் 9 கோடி ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் படப்பிடிப்பு நடக்கவே இல்லை. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி வரதராஜ் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல், அருண் ராய் இழுத்தடித்து வந்துள்ளார்.தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வரதராஜ், பெங்களூரு ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் அருண் ராய், அவரது சகோதரர் அர்ஜுன்ராய், கூட்டாளிகள் சீனிவாஸ், ரகு, கோவிந்தப்பா மீது நேற்று முன்தினம் புகார் செய்தார். ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.துளு மொழியில் அருண் ராய் தயாரித்த ஜிடிகே திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.