| ADDED : ஜூலை 12, 2025 08:01 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண்ணையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.கர்நாடகாவின் ராமதீர்த்தம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் குகை ஒன்று அமைந்துள்ளது. விஷப்பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இது உள்ளது.இந்த பகுதிகளில் சுற்றுலா வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் நினா குடினா(40) என்பதும் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது.மேலும், ஆன்மிக ரீதியில் இந்தியா வந்த அவர், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடி வந்தபோது இங்கு வந்து தங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த இடத்தில் நிலவும் ஆபத்து குறித்து விளக்கிய போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று ஆன்மிக மடம் ஒன்றில், அவரின் கோரிக்கைப்படி தங்க வைத்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் நினாவின் ஆவணங்கள் குகை பகுதியில் தொலைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு மீண்டும் சென்ற போலீசார், ஆவணங்களை தேடி கண்டுபிடித்தனர். பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஆய்வு செய்தில், கடந்த 2017 ம் ஆண்டு வர்த்தக விசாவில் நினா இந்திய வந்துள்ளார். 2018 ம் ஆண்டு ஏப்.,19 ல் காலாவதியாகிவிட்டது. அதுவரை கோவாவில் தங்கியிருந்த அவர் மீண்டும் கிளம்பி சென்று நேபளாளம் வழியாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து பெண்கள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, குழந்தைகளுடன் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.