உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்: சன்னிதானத்தில் இன்று அறிவியல்பூர்வ ஆய்வு

 சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்: சன்னிதானத்தில் இன்று அறிவியல்பூர்வ ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, இன்று அறிவியல்பூர்வ சோதனையை நடத்துகிறது. இதற்காக விசாரணை குழுவினர் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர். சோதனை கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. மண்டல - மகர விளக்கு காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை இன்று துவங்குகிறது. இந்நிலையில், சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்ட வழக்கில், பெங்களூரு தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துவாரபாலகர் சிலைகளில் இருக்கும் தங்கத்தின் தரம், செப்பு தகடுகளின் அடர்த்தி ஆகியவை குறித்து ஆராய, அறிவியல்பூர்வ சோதனை நடத்த வேண்டும் என, சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. அனுமதி இதற்காக துவாரபாலகர் சிலைகளில் இருக்கும் தங்கத்தின் மாதிரியை எடுத்து சோதனை நடத்த, கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு ஒப்புதல் அளித்த கேரள உயர் நீதிமன்றம், மண்டல பூஜை காலம் துவங்குவதற்கு முன்பாக, இந்த சோதனையை முடிக்கும்படி அறிவுறுத்தி இருந்தது. எனினும், தேவ பிரசன்னம் பார்க்காமல், இந்த சோதனையை நடத்த அனுமதிக்க முடியாது என, சபரிமலை கோவில் தந்திரி கூறினார். இதையடுத்து, தந்திரியின் அறிவுறுத்தலின்படி, தேவபிரசன்னத்திற்கு பின், சபரிமலையில் இன்று உச்ச பூஜை முடிந்து, மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டதும், அறிவியல்பூர்வ சோதனை நடத்தும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், தடயவியல் நிபுணர்கள், ரசாயன வல்லுநர்கள் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ