மும்பை: பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பாராட்டும் விதமாக, உத்தவ் சிவசேனா தரப்பு எம்.எல்.சி.,யும், உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளருமான மிலிந்த் நர்வேகர் கருத்து தெரிவித்ததை அடுத்து, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி அறிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, ஆளும், 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ல் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, முதல்வர் பதவி பா.ஜ.,வுக்கு அளிக்கப்பட்டது. இதன்படி, மஹாராஷ்டிரா, முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் மூன்றாவது முறையாக கடந்த 5ல் பதவியேற்ற நிலையில், துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். எதிர்க்கட்சி அந்தஸ்து
காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., - சமாஜ்வாதி அடங்கிய எதிர்க்கட்சியான, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, சட்டசபை தேர்தலில், 50க்கும் குறைவான தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992 டிச., 6ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன், 32வது நினைவு தினத்தையொட்டி, உத்தவ் சிவசேனா தரப்பைச் சேர்ந்த சட்டமேலவை உறுப்பினரும், உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளருமான மிலிந்த் நர்வேகர், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'சாம்னா'வில் விளம்பரம் கொடுத்திருந்தார்.இதை, சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்தார். விளம்பரத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட படத்துடன், 'இதை செய்தவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்ற சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தெரிவித்திருந்த கருத்து மற்றும் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே படங்களும் இடம் பெற்றிருந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை உத்தவ் சிவசேனா தரப்பு பாராட்டியது, அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த சமாஜ்வாதிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விளம்பரம்
இந்த விவகாரம் தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம், சமாஜ்வாதியின் மஹாராஷ்டிரா தலைவர் அபு அசிம் ஆஸ்மி நேற்று கூறியதாவது:உத்தவ் தரப்பு சிவசேனா, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. மேலும், உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆதரவாளர் மிலிந்த் நர்வேகர், மசூதியை இடித்தவர்களை சமூக வலைதளத்தில் பாராட்டி உள்ளார்.இதனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம். இது தொடர்பாக எங்கள் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேசுவேன்.மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள ஒருவர் எப்படி அவ்வாறு பேச முடியும்? பின், பா.ஜ.,வுக்கும், அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாங்கள் எதனால் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும். வகுப்புவாத சித்தாந்தவாதிகளுடன் சமாஜ்வாதி இயங்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
புறக்கணிப்பு
மஹாராஷ்டிரா சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இந்த விழாவை புறக்கணிப்பதாக, மஹா விகாஸ் அகாடி கூட்டணியினர் தெரிவித்தனர்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அவர்கள், சட்டசபை வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அருகே போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறியதை உறுதிப்படுத்தும் விதமாக, சமாஜ்வாதியைச் சேர்ந்த அபு அசிம் ஆஸ்மி, ரைஸ் ஷேக் ஆகியோர், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களாக நேற்று பதவியேற்றனர்.இது குறித்து, தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் நேற்று கூறியதாவது:தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முறைகேடுக்கான ஆதாரங்கள் இருந்தால், தேர்தல் கமிஷனில் அவர்கள் முறையிடலாம். அங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை எதிர்க்கட்சியினர் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.