சாக்கடையில் இறங்கிய துப்புரவு தொழிலாளி பலி
சித்ரதுர்கா: சாக்கடையில் அடைப்பை நீக்க இறங்கிய தொழிலாளி ஒருவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.சித்ரதுர்கா, செல்லகெரேவின் காந்திநகர் லே -- அ-வுட்டில் வசித்தவர் ரங்கசாமி, 48. துப்புரவுத் தொழிலாளி. 18ம் தேதியன்று, சித்ரதுர்காவின், திருமண மண்டபம் ஒன்றில் சாக்கடை அடைத்துக் கொண்டது. இந்த அடைப்பை சரி செய்ய, மண்டப உரிமையாளர், துப்புரவுத் தொழிலாளி ரங்கசாமியை வரவழைத்தார்.எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல், சாக்கடைக்குள் இறங்கிய அவர் சுத்தம் செய்ய முற்பட்டார். அப்போது, விஷவாயு தாக்கி அவர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்தை துப்புரவுத் தொழிலாளர் சேவை சமிதியை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தபோது ரங்கசாமி, சாக்கடையில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது.இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் சமிதி புகார் அளித்த பின்னரே, விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி, நகராட்சி அதிகாரி குரு பிரசாத், சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில், தண்ணீர் தொட்டி அல்ல; சாக்கடை என்பது உறுதியானது.அதிகாரி கொடுத்த புகாரின்படி, திருமண மண்டப உரிமையாளர் குருவீர் நாயக் மீது, செல்லகெரே போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.