சதீஷ் - விஜயேந்திரா திடீர் சந்திப்பால் பரபரப்பு
பெங்களூரு : காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா திடீர் சந்திப்பால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.முதல்வர் பதவியை பிடிக்க, துணை முதல்வர் சிவகுமார் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கிறார். ஆனால், சித்தராமையா ராஜினாமா செய்தால், அவருக்குப் பதிலாக அஹிந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, குறிப்பாக தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற குரல், காங்கிரசில் எழுந்துள்ளது.அதனால், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு, முதல்வர் ஆகும் ஆசை வந்துள்ளது. அவருக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் ஆதரவும் உள்ளது. அவர்கள் இருவரும் சமீப காலமாக அடிக்கடி சந்தித்து, ஆலோசனை நடத்துகின்றனர். இது, சிவகுமாருக்கு எரிச்சலை கிளப்புகிறது. இந்நிலையில், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள வீட்டில், சதீஷ் ஜார்கிஹோளியை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று காலை திடீரென சந்தித்து பேசினார். இருவரும் அரைமணி நேரம் விவாதித்தனர். இது, கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து விஜயேந்திரா கூறுகையில், ''அரசியல் காரணங்களுக்காக சதீஷ் ஜார்கிஹோளியை சந்திக்கவில்லை. என் ஷிகாரிபுரா தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில், இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து பேசினேன். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக சதீஷ் கூறி உள்ளார்,'' என்றார்.விஜயேந்திரா என்ன கூறினாரோ, அதே கருத்தை சதீஷ் ஜார்கிஹோளியும் கூறினார்.விஜயேந்திரா சென்ற அரைமணி நேரத்தில், சதீஷ் வீட்டிற்கு துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் வந்தார். அவர்கள் இருவரும் அரைமணி நேரம், ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பின் சுரேஷ் அளித்த பேட்டியில், ''கனகபுரா, சென்னப்பட்டணா தொகுதியில் சாலை பணிகள் தொடர்பாக, சதீஷ் ஜார்கிஹோளியை சந்தித்தேன். எங்கள் சந்திப்புக்கு, புது அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.''நான் ஒன்றும் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கவில்லையே. எங்கள் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்து உள்ளேன். சித்தராமையா மீது முடா வழக்கு இருக்கலாம். ஆனால் அவர் ஐந்து ஆண்டு களும் முதல்வராக நீடிப்பார். முதல்வர் பதவி காலியாக இல்லை,'' என்றார்.