எஸ்.சி., உள்ஒதுக்கீடு நடைமுறை தெலுங்கானாவில் அமலுக்கு வந்தது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத் : நாட்டில் முதல் மாநிலமாக, பட்டியலினத்தவருக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், எஸ்.சி., வகைப்பாடு மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேறியதை அடுத்து, அதற்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது.தெலுங்கானாவில் எஸ்.சி., சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 15 சதவீத இட ஒதுக்கீட்டை வகைப்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஷமீம் அக்தர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.இந்த கமிஷன் ஆய்வு செய்து, எஸ்.சி., சமூகத்தில் உள்ள 59 ஜாதிகளை, அவர்களின் சமூக, பொருளாதார அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரித்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சதவீதத்தை அளிக்க பரிந்துரைத்தது. இந்த எஸ்.சி., வகைப்பாடு மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று, எஸ்.சி., வகைப்பாட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. கமிஷன் அளித்துள்ள பரிந்துரை:1 பிரிவு 1ல் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய 15 ஜாதியினருக்கு, 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.2 பிரிவு 2ல், மிதமான பலன்களை பெற்று வரும் 18 ஜாதிகளை சேர்ந்தோருக்கு, 9 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.3 பிரிவு 3ல், குறிப்பிடத்தக்க பயன்களை பெற்ற, 26 ஜாதிகளை சேர்ந்தோருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தெலுங்கானாவில் எஸ்.சி., வகைப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையின் முதல் பிரதி முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், நம் நாட்டில் எஸ்.சி., வகைப்பாட்டை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை தெலுங்கானா பெற்றுள்ளது.இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள், எஸ்.சி., வகைப்பாடு கொண்டு வரப்படும் என வாய்மொழியாக சொல்லி வந்தன. ஆனால், யாரும் அதை நிறைவேற்றவில்லை. இனி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் எஸ்.சி., சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.