மேலும் செய்திகள்
முதலாம் புலிகேசி கட்டிய சிவன் கோவில்
04-Feb-2025
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் உன்கல் ஏரி அருகில் அமைந்துள்ளது, 900 ஆண்டுகள் பழமையான சந்திரமவுலீஸ்வரர் கோவில்.பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்ட இக்கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். சிற்ப கலைகள் மீது ஆர்வம் உள்ளவர்களை மிகவும் ஈர்க்கும். இதன் சிற்ப கலைக்காகவே, இக்கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.வரலாற்று நிபுணர்களின் கூற்றுப்படி, இக்கோவிலை சில கலைஞர்கள், சிற்பிகள் இணைந்து ஒரே நாள் இரவுக்குள் கட்ட தீர்மானித்தனர். ஆனால் இரவு நேரத்துக்குள் கட்டி முடிக்காததால், பாதியிலேயே நிற்கிறது. மற்ற கோவில்கள் போன்று, இக்கோவிலில் கோபுரம் இல்லை.இக்கோவிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. விநாயகர் இங்கு நடனமாடுபவராக காட்சி அளிக்கிறார்.மூலவரான சந்திரமவுலீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோவில் சுவர்களில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. துாண்கள் கருப்பு கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. நடன கோலத்தில் விநாயகர் காணப்படுகிறார். தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.ஹூப்பள்ளி சென்றால் இக்கோவிலில் தரிசனம் செய்வதை மறந்து விடாதீர்கள்.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் செல்லலாம்.ரயிலில் செல்வோர், உன்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்து செல்லலாம் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர், ஹூப்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பஸ்சில் உன்கல் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்து செல்லலாம்.
04-Feb-2025