கொச்சி - மூணாறு இடையே கடல் விமான சோதனை ஓட்டம்
கொச்சி : கொச்சியில் இருந்து, நேற்று காலை 10:30க்கு புறப்பட்ட கடல் விமானம், 11:00 மணிக்கு மூணாறில் உள்ள மாட்டுப்பெட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிராந்தியங்களை இணைப்பதற்கான மத்திய அரசின், 'உதான்' திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களிலும் கடல் விமான சேவைக்கான சோதனைகள் துவங்கி உள்ளன.இதன்படி, கேரளாவின் கொச்சி, மூணாறு, வயநாடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையே கடல் விமான சேவையை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, கொச்சி - மூணாறு இடையிலான கடல் விமான சோதனை ஓட்டம், நேற்று நடந்தது. கொச்சியின் போல்காட்டி அரண்மனையை ஒட்டியுள்ள ஏரியில் இருந்து நேற்று காலை புறப்பட்ட கடல் விமானம், அரை மணி நேரத்தில் மூணாறு மாட்டுப்பெட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.கொச்சியில் இருந்து மூணாறுக்கு சாலை மார்க்கமாக வந்தடைய, ஐந்து மணி நேரம் ஆகும். இந்த சோதனை ஓட்டத்தின் போது, கேப்டன் டேனியல் மான்ட்கோமெரி மற்றும் கேப்டன் ராட்கர் பிரிங்கர் விமானத்தை இயக்கினர். அவர்களுடன் நான்கு பேர் பயணித்தனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனமும், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும், 'டி ஹாவிலேண்ட் ஏவியேஷன் கம்பெனி' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளன.அனைத்தும் திட்டமிட்டபடி தடையின்றி நடந்தால், அடுத்த ஆறு மாதத்தில் கொச்சி - மூணாறு இடையே பொது மக்களுக்கான கடல் விமான சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது.
கடல் விமான சேவை ஒரு அறிமுகம்
1 நீர்நிலைகளில் இருந்து புறப்பட்டு, வானில் பறந்து, மற்றொரு நீர்நிலையில் தரையிறங்கும் சிறிய விமானங்கள் கடல் விமானம் என அழைக்கப்படுகின்றன2 இதில், சில குறிப்பிட்ட நவீன கடல் விமானங்கள் நிலத்திலும் கூட தரையிறங்கும் திறன் உடையவை3 விமானத்தின் அளவுக்கு ஏற்ப 9, 15, 17, 20 மற்றும் 30 பேர் வரை பயணிக்கலாம்4 கடல் விமானங்கள் தரையிறங்குவதற்கு 6 அடி ஆழ நீர்நிலைகள் போதும். புறப்பட, நீர்நிலைகளில் 800 மீட்டர் துார ஓடுதளம் தேவை5 கடல் விமானங்கள் பெரும்பாலும் சுற்றுலா தளங்களிலேயே இயக்கப்படுகின்றன.