UPDATED : நவ 02, 2024 04:56 PM | ADDED : நவ 02, 2024 02:50 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று புத்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உ.பி.,யை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.இறந்தவர்களில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவன் என்பதும், மற்றொருவன் உள்ளூரைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர், வேறு பயங்கரவாதிகள் யாரேனும் தங்கி உள்ளனரா என தேடி வருகின்றனர்.