வட மாநிலங்களில் பேய் மழை: ஏழு பேர் பலியான பரிதாபம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி உட்பட வடமாநிலங்களில் நேற்று அதிகாலை பேய்மழை கொட்டித் தீர்த்தது. மழை தொடர்பான பாதிப்புகளில் ஏழு பேர் பலியாகினர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் நான்கு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.டில்லியில் நேற்று அதிகாலை துவங்கிய கனமழை 9:00 மணி வரை பெய்தது. மூன்று மணி நேரத்தில் நகரில் 7.7 செ.மீ., அளவுக்கு மழை பதிவானது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலையில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஓடியதால் கார்கள் நீரில் மூழ்கின.டில்லி நஜப்கார் பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்தது. வீட்டுக்குள் துாங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள், அவர்களது தாய் உட்பட நால்வர் உயிரிழந்தனர். ஆர்.கே.புரம் பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த மூன்று விமானங்கள் ஜெய்ப்பூர், ஆமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், 200 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகின.உத்தர பிரதேசத்திலும் இடி, மின்னலுடன் பேய்மழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்தனர்.