டில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துவாரகாவில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்று ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு, டில்லி தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளி முழுவதும் சல்லடை போட்டு தேடினர். இதேபோல, துவாரகாவில் மாடர்ன் கான்வென்ட் பள்ளி மற்றும், ஸ்ரீராம் வேர்ல்டு ஆகிய பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், 'குழந்தைகளை திரும்ப அழைத்துச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் எங்களுக்கு குறுஞ்செய்தி வந்தது. ஆனால், காரணம் ஏதும் குறிப்பிடவில்லை. இதனால், உடனடியாக பள்ளிக்கு வந்து, குழந்தைகளை அழைத்து சென்று விட்டோம்,' என்றனர். இதேபோல, கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் ஒரே சமயத்தில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.