| ADDED : ஜன 14, 2024 11:30 PM
கலபுரகி: கணவர் மீது போலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, கான்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.கலபுரகி கமலாபூரில் வசிப்பவர் 35 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக, பெண்ணின் கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார். மனம் உடைந்த பெண், கணவர் மீது கமலாபூர் போலீசில் புகார் செய்தார்.இந்நிலையில் கமலாபூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் பசவராஜ், 38, பெண்ணின் மொபைல் எண்ணுக்கு அழைத்து பேசி உள்ளார். 'உனது கணவரை நான் கண்டிக்கிறேன். ஆனால் என்னுடன் ஒரு நாள் இரவு, முழுதும் உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு பெண் அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு, பெண் வீட்டிற்கு சென்றார். அங்கு காரில் வந்த பசவராஜ், பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.'உனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள். இல்லையென்றால் உன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் தள்ளுவேன்' என்று மிரட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த பெண், பசவராஜ் மீது, கலபுரகி மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்படி, பசவராஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.