பிட்காயின் மோசடியில் தொடர்பா? மறுக்கிறார் சரத் பவார் மகள்
மும்பை'பிட்காயின்' மோசடி வாயிலாக திரட்டிய பணத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, தேசியவாத காங்., - சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே மறுத்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்றும் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. ரூ.6,000 கோடிஇந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் சுதான்ஷு திரிவேதி நேற்று முன்தினம் சில, 'ஆடியோ'க்களை வெளியிட்டார்.மாநிலத்தில் நடந்த, 'பிட்காயின்' எனப்படும் மெய்நிகர் நாணய மோசடியில், தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவு தலைவர் சரத் பவாரின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலே, காங்., மாநிலத் தலைவர் நானா படோல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறினார்.மேலும், அந்த மோசடியில் கிடைத்த பணத்தையே, இந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.கடந்த, 2017ல், அதிக லாபம் தருவதாகவும், பிட்காயின் தருவதாகவும் பலரிடம் பண மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அந்த வகையில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க, 2018ல் நியமிக்கப்பட்டார், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவீந்திர நாத் படேல். ஆனால், 2022ல், மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த மோசடி தொடர்பாக, பா.ஜ.,வின் சுதான்ஷு திரிவேதி நேற்று முன்தினம் கூறியதாவது:பிட்காயின் மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி ரவீந்திர நாத் படேல் சிறையில் இருந்தார். அப்போது, ஒரு ஆடிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் கவுரவ் மேத்தா என்பவர் அவரை சந்தித்துள்ளார்.அவரும் பிட்காயின் மோசடியில் ஒரு முக்கிய சாட்சி. தேர்தல் பிரசாரத்துக்கு தேவைப்படுவதால், பிட்காயினை பணமாக்கித் தரும்படி, ரவீந்திர நாத் படேலிடம், கவுரவ் மேத்தா கூறியுள்ளார்.சரத் பவாரின் தேசியவாத காங்., - எம்.பி.,யான சுப்ரியா சுலே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோல் ஆகியோர் கூறியபடியே, இதில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த இருவரும் கூறியதாக சில ஆடியோக்களை கொடுத்துள்ளார். அந்த ஆடியோதான், தற்போது வெளியாகியுள்ளது.பொய் புகார்பிட்காயின் மோசடியில் கிடைத்த பணம், தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, சுப்ரியா சுலே நேற்று கூறியதாவது:ஆடியோக்கள் வெளியானது தொடர்பாக எனக்கும் தகவல் கிடைத்தது. உடனே, நேற்று முன்தினமே, புனே போலீஸ் கமிஷனரை அழைத்து பேசினேன். சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தேன். இந்த ஆடியோக்களை வெளியிட்டதுடன், என் மீது பொய் புகார் கூறிய, சுதான்ஷு திரிவேதிக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளேன். அது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரலும் இல்லை. இது தொடர்பாக, சுதான்ஷு திரிவேதிக்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவர் கூறும் டிவி சேனலில் கூட பதிலளிக்கக் காத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய பதில் இதுதான். இது முழுக்க முழுக்க பொய்க் குற்றச்சாட்டு, போலியானது.இவ்வாறு அவர் கூறினார்.சந்தேகம்''சிறையில் இருந்த ஒருவர் கூறியதை வைத்து, பொய்க் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இது பா.ஜ.,வால் மட்டுமே முடியும்,'' என, சரத் பவார் கூறியுள்ளார்.இந்நிலையில், சரத் பவாரின் அண்ணன் மகனும், தேசியவாத காங்., தலைவருமான அஜித் பவார் கூறுகையில், ''சுப்ரியா சுலே என்னுடைய சகோதரி. அவருடைய குரல் எனக்கு நன்கு தெரியும்.''அதுபோல, நானா படோலின் குரலும் தெரியும். இந்த ஆடியோக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், முழுமையான விசாரணை தேவை,'' என, குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை சோதனை
மஹாராஷ்டிராவில் நடந்த பிட்காயின் மோசடி தொடர்பான வழக்கில் தொடர்புடைய, ஆடிட்டர் அலுவலக ஊழியர் கவுரவ் மேத்தாவுக்கு சொந்தமான, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த, 2017ல் நடந்த மோசடி தொடர்பாக, மஹாராஷ்டிரா மற்றும் டில்லியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், அதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.