உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி காங்., மேலிடத்தை கடுப்பேற்றும் சசி தரூர்

 பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி காங்., மேலிடத்தை கடுப்பேற்றும் சசி தரூர்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை காங்., மூத்த தலைவர் சசி தரூர் மீண்டும் புகழ்ந்து பேசி உள்ளது, அக்கட்சி மேலிடத்தை கடுப்பாக்கி உள்ளது. காங்., மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், 69, சமீப காலமாகவே பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும் புகழ்ந்து வருகிறார். இது, காங்., மேலிடத்தை எரிச்சலடைய செய்துள்ளது. அதையும் மீறி, பல்வேறு விவகாரங்களில் குறிப்பாக, வெளியுறவு கொள்கை யில் மத்திய அரசை அவர் பாராட்டி வருகிறார். அருமையான பேச்சு 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், நம் நாட்டின் நிலைப்பாட்டை விளக்க, காங்., மேலிடத்தின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் சென்றார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் சசி தரூர் நேற்று வெளியிட்ட பதிவு: டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் காலனித்துவத்துக்கு பிந்தைய மனநிலையை வலுவாக வளர்ப்பது பற்றி அருமையாக எடுத்துரைத்தார். இந்தியா வெறும் வளரும் சந்தையல்ல; உலகத்துக்கான வளரும் மாடல் என்றும் பிரதமர் மோடி கூறினார். எப்போதும் நான் தேர்தல் மனநிலையில் இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் உணர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் உரையில், முக்கிய அம்சமாக, நம் பாடத் திட்டத்தை வகுத்த ஆங்கிலேய அதிகாரி மெக்காலேயின், 200 ஆண்டு கால அடிமை மனநிலையை முறியடிப்பது பற்றி இருந்தது. நம் நாட்டின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளில் பெருமையை மீட்டெடுக்க, 10 ஆண்டு தேசிய இயக்கத்துக்கும் அழைப்பு விடுத்தார். மகிழ்ச்சி ஒட்டுமொத்தத்தில், பிரதமர் மோடியின் இந்த உரை பொருளாதார கண்ணோட்டமாகவும், முன்னேற்றத்திற்காக தேசத்தை துாண்டும் ஒரு கலாசார அழைப்பாகவும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். பீஹா ர் தேர்தல் தோல்வியால் காங்., மேலிடம் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, பிரதமர் மோடியை சசி தரூர் பாராட்டி உள்ளது, அக்கட்சி தலைவர்களை கோபமடைய செய்துள்ள தாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ