ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம்; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
புதுடில்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கி இருக்கலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவது, அவரது தனிப்பட்ட முடிவு. அவர் இந்தியாவில் விரும்பும் வரை தங்கலாம். வங்கதேசம் உடனான நிலையான உறவுகளை எதிர்பார்க்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இங்கு வந்தார். இந்தியாவில் இருந்து திரும்பி செல்வது அவர்தான் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.வங்கதேசத்தில் நம்பகமான மற்றும் ஜனநாயக அரசியல் நிலைப்பாட்டு இந்தியாவின் நீண்டகால விருப்பம் ஆகும். வங்கதேசத்தில் உள்ள மக்கள், குறிப்பாக இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், முன்பு தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம்.இப்போது பிரச்னை நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு ஆகஸ்டில் அரசுக்கு எதிராக நடந்த இளைஞர் போராட்டத்தால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். மாணவர்களை கொடூரமாக அடக்க முயன்றதாக ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.மேலும், ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்ட மூன்று ஊழல் வழக்குகளுக்காக, 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.