உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழம் தின்று கொட்டை போட்ட சித்துவுக்கு ஐஸ் வைக்கும் சிவா

பழம் தின்று கொட்டை போட்ட சித்துவுக்கு ஐஸ் வைக்கும் சிவா

காங்கிரசில் மாநிலத் தலைவராக இருப்பவரின் தலைமையின் கீழ், சட்டசபை தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தால், மாநிலத் தலைவருக்கே முதல்வர் பதவி கொடுக்கும் வழக்கம் இருந்தது.கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. நியாயப்படி பார்த்தால், அவர்தான் முதல்வர் ஆகியிருக்க வேண்டும்.ஆனால், மூத்த அரசியல்வாதியான சித்தராமையா முதல்வர் ஆனார். சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து கட்சி மேலிடம் சமாதானம் செய்தது.

தகவல் இல்லை

ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தகவல் வெளியானது.ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே சிவகுமார் ஆதரவாளர்கள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், 'எங்கள் தலைவர் கூடிய விரைவில் முதல்வர் ஆவார்' என்று கூறினர்.கடுப்பான சித்தராமையாவின் ஆதரவாளர்கள் எங்கள் தலைவர் தான் ஐந்து ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார் என்று பதிலடி கொடுத்தனர்.

துளியும் மனமில்லை

இந்நிலையில், 'முடா' வழக்கில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு ஆனதும், அவர் பதவி விலகுவார்; முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என, சிவகுமார் கனவு கண்டார். ஆனால் நாற்காலியை விட்டு இறங்க முதல்வருக்கு துளியும் மனமில்லை என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்தின.சமீபத்தில் நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது, சித்தராமையாவுக்கு பிளஸ் ஆக அமைந்தது. அவர் பதவியில் தொடரும் சூழ்நிலை உருவானது.இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிவகுமார், 'எனக்கும், முதல்வருக்கும் இடையில் அதிகார பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் உள்ளது' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஆனால் 'அப்படி இல்லவே இல்லை' என்று முதல்வரும் தடாலடியாக மறுத்தார். வேறு வழியில்லாமல் 'எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் இல்லை' என சிவகுமார் மாற்றிப் பேசினார்.

முட்டி மோதி...

சித்தராமையாவிடம் முட்டி மோதி, முதல்வர் பதவியை பெற முடியாது என்பதை சிவகுமார் தற்போது உணர்ந்துள்ளார். இதனால் முதல்வருக்கு ஐஸ் வைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.'முடா வழக்கில் முதல்வர் மீது எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு தோளோடு தோள் நிற்பேன். என் இறுதி மூச்சு வரை அவருடன் இருப்பேன்' என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேச ஆரம்பித்துள்ளார்.இப்படி பணிவுடன் பேசி, முதல்வர் மனதை மாற்றி விடலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சித்தராமையா முன், சிவகுமாரின் நடிப்பு எடுபடுமா என தெரியவில்லை.இருந்தாலும் சமீபத்தில் சாம்ராஜ்நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், 'என் அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்' என்று கூறினார். அவரது பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக அரசியல்வாதிகள் கருதுகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

skv srinivasankrishnaveni
டிச 11, 2024 09:05

ரெண்டு எருமைகள் மோதிக்கொண்டா இடையே இருப்போருக்கே சங்கடம் ஒன்னையொன்னு முழுங்கபார்க்கும் malaippaambukale


முக்கிய வீடியோ