சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனை 10 மாடிகளுடன் தரம் உயர்த்த முடிவு
பெங்களூரு: பவுரிங் மருத்துவமனை கட்டடம், 10 மாடிகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறவுள்ளது. விரைவில் கட்டட பணிகள் துவங்கவுள்ளன.இது குறித்து பவுரிங் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் கூறியதாவது:பெங்களூரின் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையின் பழைய கட்டடம், இரண்டு மாதங்களுக்கு முன்பே இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட, முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின் கட்டுமான பணி துவங்கும். 2027ல் திறப்பு
மொத்தம் 212.23 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டப்படும். 2027ல் புதிய மருத்துவமனையை திறக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணியை முடிக்க இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படும். தற்போதைக்கு பவுரிங் மருத்துவமனை அருகில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மூன்று கட்டங்களாக மருத்துவமனை கட்டப்படும். முதல் கட்டத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் உள்ள தரைதளம், முதல் மாடி; இரண்டாம் கட்டத்தில் இரண்டாவது முதல் ஆறாவது மாடிகள் வரை கட்டப்படும். இதுவும் கூட வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் உட்கொண்டிருக்கும்.மூன்றாம் கட்டத்தில், ஏழாவது முதல் 10வது மாடிகள் வரை கட்டப்படும். இவற்றில் 360 படுக்கைகள் திறன் கொண்ட வார்டுகள் இருக்கும்.ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பவுரிங் மருத்துவமனை, பெங்களூரின் வரலாற்றில், சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இது 1890 வரை பெங்களூரின் ஒரே பொது மருத்துவமனையாக இருந்தது. 1866ல் மைசூரு கமிஷனராக இருந்த லெவின் பெந்தான் பவுரிங், இம்மருத்துவமனை கட்டும் பணியை துவக்கி வைத்தார். பெண் டாக்டர்கள்
பாரிசில் இருந்த லா ரிபோசி கட்டடத்தின் வரைபடத்தை மையமாக கொண்டு, பவுரிங் மருத்துவமனை கட்டப்பட்டது. 1868ல் கட்டுமான பணி முடிந்து, திறந்து வைக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவரை நினைவுகூரும் நோக்கில், 'பவுரிங்' என பெயர் சூட்டப்பட்டது.பெண்களுக்கு, பெண் டாக்டர்கள் மூலமாகவே சிகிச்சை அளிக்கும் நோக்கில், கடந்த 1900ல் பிரிட்டிஷ் பெண்களுக்கு மருத்துவ கல்வி அளிக்க, மருத்துவமனை விஸ்தரிக்கப்பட்டது. இதனை வைஸ்ராய் லார்டு ஜார்ஜ் நதானியல் கர்ஜன் திறந்து வைத்தார். 104 படுக்கைகள் கொண்ட திறன் கொண்ட, மைசூரு மாநிலத்துக்கு சொந்தமான இந்த மருத்துவமனை, 1884ல் ராணுவ ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.முதன் முதலில் கட்டிய பவுரிங் மருத்துவமனையின் சிறிய கட்டடம், இடிக்காமல் தக்க வைத்து கொள்ளப்படும். இந்த கட்டடத்தை மியூசியமாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதை பற்றி வரலாற்று வல்லுனர்களும் வலியுறுத்தி உள்ளனர். மியூசியத்தில், மருத்துவமனை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.