மேலும் செய்திகள்
'முடா' வழக்கு சித்து மீது அமலாக்க துறை வழக்கு
01-Oct-2024
மைசூரு : 'முடா' முறைகேடு வழக்கில், மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நான்கு மணி நேரத்துக்கு மேல், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தப்பட்டது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இவரது சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரு சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில், முதல்வர் மீது வழக்குப்பதிய கவர்னரும் அனுமதி வழங்கினார்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்தார். 3 மாதம் 'கெடு'
இதற்கிடையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும், ஸ்நேகமயி கிருஷ்ணா மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று மாதத்துக்குள் முடிக்கவும் கெடு விதித்தது.இதையடுத்து, முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா ஏ 1, பார்வதி ஏ 2, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன் சாமி ஏ 3, நிலம் விற்ற தேவராஜ் ஏ 4 ஆக சேர்க்கப்பட்டு வழக்குப் பதிவானது. முடா வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறையிலும், ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அதன்படி சித்தராமையா மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது.முடா முறைகேடு விசாரணையை, மூன்று மாதத்திற்குள் முடிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதால், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கும் சம்மன் வழங்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றனர். அவர் கொடுத்த ஆவணங்களையும் வாங்கி கொண்டனர். 'மாஜி' கலெக்டர்
ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.பி., குமார் நாயக், மைசூரு கலெக்டராக இருந்த போது தான், முடா முறைகேடு நடந்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவருக்கும் லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலய்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.ஜே.எச்.படேல் அமைச்சரவையில் நகர்புற அமைச்சராக இருந்த, பச்சே கவுடாவிடமும் விசாரிக்கப்பட்டது. முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நிலம் விற்ற தேவராஜும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.இந்நிலையில், வழக்கின் ஏ 2வான, முதல்வரின் மனைவி பார்வதிக்கும், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இதுபற்றி யாருக்கும் எந்த தகவலும் இல்லை. நேற்று காலை 11:00 மணியளவில் மைசூரு முடா அலுவலகத்திற்கு, பார்வதி சத்தமே இல்லாமல் வந்தார். அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் விசாரணை நடத்தி உள்ளார். ரகசியம்
'கெசரே கிராமத்தில் இருந்த உங்களுக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை, முடா கையகப்படுத்தியது எப்போது. அதற்கு பதில் நீங்கள் மாற்று நிலம் வாங்கியது எப்போது. 14 வீட்டுமனைகளையும் முடாவிற்கு திருப்பி கொடுத்தது ஏன்' என்பது உட்பட, பல கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பார்வதியும் பதில் அளித்தார் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.விசாரணை முடிந்ததும், சத்தமின்றி எப்படி வந்தாரோ, அதுபோல சத்தமின்றி வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றி, லோக் ஆயுக்தா அலுவலக ஊழியர்களுக்கு கூட தெரியவில்லை. அந்த அளவு ரகசியமாக நடந்து உள்ளது.முடா வழக்கில் சித்தராமையா தவிர மற்ற மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதனால், முதல்வரிடம் விசாரணை நடத்தப்படுவது எப்போது, அவருக்கு சம்மன் அனுப்புவது எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
01-Oct-2024