உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா...சிவகுமார்...சதீஷ் ஜார்கிேஹாளி! இனிதான் இருக்கு... முதல்வர் பதவிக்கு போட்டி

சித்தராமையா...சிவகுமார்...சதீஷ் ஜார்கிேஹாளி! இனிதான் இருக்கு... முதல்வர் பதவிக்கு போட்டி

சென்னபட்டணாவில் காங்கிரசை வெற்றி பெற வைத்ததன் மூலம், துணை முதல்வர் சிவகுமார், தான் யார் எனபதை காண்பித்து உள்ளார். இனி மேல் தான் அவருக்கும், சித்தராமையாவுக்கும் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்படும்.ராம்நகர் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் உள்ளன. இதில் ஒன்றான கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் துணை முதல்வர் சிவகுமார். ராம்நகர் அரசியலில் சிவகுமாருக்கு என்று தனி செல்வாக்கு இருந்தாலும், கனகபுராவில் மட்டுமே காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. சென்னப்பட்டணா, மாகடி, ராம்நகர் தொகுதிகள் ம.ஜ.த.,வின் கோட்டையாக இருந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சென்னப்பட்டணாவை தவிர, மற்ற 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. சென்னப்பட்டணாவில் ம.ஜ.த.,வின் குமாரசாமி வெற்றி பெற்றார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் வெற்றி பெற்று குமாரசாமி எம்.பி., ஆனதும், சென்னப்பட்டணா தொகுதி காலியானது.

நீயா, நானா

இதனால் அந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்றி, ராம்நகர் மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக்க சிவகுமார் பிளான் போட்டார். முதலில் சென்னப்பட்டணாவில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி பெறும் குதிரையான யோகேஸ்வரை களத்தில் இறக்கினார். எதிரணி வேட்பாளர் குமாரசாமியின் மகன் நிகில்.சென்னப்பட்டணாவில் சிவகுமார், குமாரசாமி இடையில் நீயா, நானா போட்டி ஏற்பட்டது. அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. 92 வயதிலும் பேரன் நிகிலுக்காக தேவகவுடா பிரசாரம் செய்தார். ஆனால் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர் வெற்றி வாகை சூடினார்.சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிவகுமார் முதல்வர் ஆவார் என்ற பேச்சு அடிபட்டது. இதனால் அங்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் சிவகுமாரும், அவரது தம்பி சுரேசும் கண்ணும், கருத்துமாக இருந்தனர்.

அழுத்தம்

சென்னப்பட்டணாவில் கடந்த 2008 ல் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றது. அப்போது வென்றவரும் இதே யோகேஸ்வர் தான். அதன்பின் இடைத்தேர்தல் உட்பட 4 தேர்தலில் காங்கிரஸ் வரிசையாக தோற்றது. தற்போது, பெற்று உள்ள வெற்றியால் காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். சென்னப்பட்டணா வெற்றி மூலம், தனக்கு முதல்வர் பதவி தரும்படி சிவகுமார் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.இது ஒரு புறம் இருக்க முடா வழக்கில் சிக்கியதால், முதல்வர் சித்தராமையாவின் பதவி மீது கத்தி தொங்கியது. பா.ஜ., கோட்டையாக உள்ள ஹாவேரி ஷிகாவி தொகுதியில், கட்சியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது. தற்போது ஷிகாவியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. தன்மூலம் தனது பலத்தை காட்டிய சித்தராமையா, மேலிடத்திடம் நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்கிறேன் என்று சொல்வதற்கு எல்லா அறிகுறியும் உள்ளது. இரு தலைவர்களும் தங்கள் சக்தியை காட்டி உள்ளனர். இதனால் வரும் நாட்களில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுபோல பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியும் முதல்வர் பதவி எதிர்பார்க்கிறார். 2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 'நான் தான் முதல்வர்' என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். இடைத்தேர்தலில் ஷிகாவி தொகுதி பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. பா.ஜ., கோட்டையை தகர்த்து காங்கிரசை வெற்றி பெற வைத்து இருப்பதன் மூலம், தானும் ஒரு வலுவான தலைவர் என்பதை சதீஷ் நிரூபித்து உள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை