உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரிய தலைவர் பட்டியலில் திருத்தம் மேலிடம் மீது சித்து, சிவகுமார் அதிருப்தி

வாரிய தலைவர் பட்டியலில் திருத்தம் மேலிடம் மீது சித்து, சிவகுமார் அதிருப்தி

பெங்களூரு: டில்லிக்கு அனுப்பிய வாரிய தலைவர்கள் பட்டியலில், சிலரது பெயர்களை கைவிட்டு, புதியவர்கள் பெயரை சேர்த்ததால், காங்கிரஸ் மேலிடம் மீது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் அதிருப்தி அடைந்து உள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார். இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆன பெரும்பாலோனோருக்கு, அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இதனால் அதிருப்தியில் உள்ளவர்களை, அமைச்சர் பதவிக்கு இணையான, வாரிய தலைவர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் முடிவு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

4 பெயர்கள்

பொங்கலுக்கு பிறகு எந்த நேரத்திலும், வாரிய தலைவர் பதவி நிரப்பப்படலாம் என்று கூறப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் 36 பேர், கட்சி தொண்டர்கள் 39 பேருக்கு பதவி கிடைக்கும் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார்.இந்நிலையில் வாரிய தலைவர் பதவியை நிரப்புவது குறித்து, பெங்களூரு தாஜ் ஹோட்டலில், கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது முதல்வர், துணை முதல்வர் இணைந்து தயாரித்து அனுப்பிய, பெயர் பட்டியலில் சிலரது பெயர்கள் கைவிடப்பட்டு இருந்தது. கலபுரகி மாவட்டத்தின் காங்கிரஸ் தொண்டர்கள் லலித் ராகவ், நரேந்திரா, மசார்கான், ஜக்தேவ் ஆகியோர் பெயர்கள் புதிதாக இடம்பெற்று இருந்தது. தங்களிடம் கேட்காமல் புதியவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்ததால், மேலிடம் மீது சித்தராமையா, சிவகுமார் அதிருப்தி தெரிவித்தனர்.

ஏமாற்றம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கலபுரகியை சேர்ந்தவர் என்பதால், நான்கு பேரின் பெயர்களையும் அவர் பரிந்துரை செய்தாரா அல்லது அவரது மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கே ரகசியமாக காய் நகர்த்துகிறாரா என்று, காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.புதியவர்கள் பெயர் இடம் பெற்று உள்ளதால், வாரிய தலைவர் பெயர் பட்டியலை வெளியிடுவதை, முதல்வர் சித்தராமையா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது, இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளி போகலாம். பதவியை எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை