சிவகுமார் முதல்வர் ஆவதை தடுக்க சதி
துமகூரு : ''சிவகுமார் முதல்வர் ஆவதை தடுக்க, காங்கிரசின் சில அமைச்சர்கள் சதி செய்கின்றனர்,'' என்று, துருவகெரே ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா கொளுத்தி போட்டு உள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:ஒக்கலிக சமூக மக்கள் சுயமரியாதை கொண்டவர்கள். இதனால் என்னை நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்து எடுத்து உள்ளனர். இந்த மக்களுக்காக கடைசி வரை களத்தில் நின்று போராடுவேன்.துணை முதல்வர் சிவகுமாரும் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு முதல்வர் ஆகும் எல்லா தகுதியும் உள்ளது.ஆனால் அதை தடுக்க காங்கிரசின் சில அமைச்சர்கள் சதி செய்கின்றனர். அவரிடம் இருந்து மாநில தலைவர் பதவியையும் பறிக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில், சிவகுமார் பங்களிப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.சிவகுமாரை இப்படி நடத்துவது ஒக்கலிக சமூக தலைவர்களை அரசியல்ரீதியாக ஓரம்கட்டும் முயற்சி. ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது, அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.