உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி கொடுங்கள்: சிவகுமார் கோரிக்கை

மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி கொடுங்கள்: சிவகுமார் கோரிக்கை

'மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி கொடுங்கள்' என்று, ராஜஸ்தானில் நடந்த நீர்வள அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய அரசுக்கு, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், '2047ம் ஆண்டில் நீர் வளமான நாடாக இந்தியா' என்ற தலைப்பில், இரண்டு நாட்கள் நடக்கும், மாநில நீர்வள அமைச்சர்கள் இரண்டாவது ஆண்டு மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாட்டில் கர்நாடக துணை முதல்வரும், நீர்பாசன அமைச்சருமான சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:தமிழகத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்கவும், பெங்களூரின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யவும் மேகதாதில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில், விரைவில் அனுமதி கொடுங்கள்.பத்ரா மேலணை திட்டத்திற்காக 2023 - 2024 ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.ஆனால் பணத்தை இன்னும் விடுவிக்கவில்லை. திட்டத்தை விரைவில் முடிக்க நிதியை விடுவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். கிருஷ்ணா நதிநீர் பிரச்னையில் கடந்த 2011ல் வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்களை செய்ய, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

சுத்தமான குடிநீர்

கடந்த 2018ல் மகதாயி நதிநீர் தீர்ப்பாயம் தீர்ப்பின்படி, கலசா திட்டத்திற்கு தேசிய வனவிலங்கு கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் நமது நாட்டில் உள்ளனர். ஆனால் வெறும் 4 சதவீதம் பேருக்கு மட்டும், சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. வரும் நாட்களில் நாடு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.விவசாய தேவைகள், வளர்ந்து வரும் மக்கள் தொகை, விரிவடையும் நகரங்கள் இவற்றை சமாளிக்க வேண்டும். நீர் சேமிப்பு திறன் நிலையான முன்னேற்றங்களை அடைய, நீர் வளங்களை வலுப்படுத்துவது அவசியம். நீர் தனித்துவமான வளம். காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் நீர் மாசுபாடு, பல்வேறு துறைகள் அல்லது பயனர்களுக்கு இடையிலான போட்டியால் தண்ணீர் பிரச்னை அதிகரித்து உள்ளது.நீர்பாசன திட்டங்களை மேம்படுத்த, கர்நாடகா பல சீர்திருத்தங்களை செய்து உள்ளது. கால்வாய் வழியாக சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை தடுக்க, நாங்கள் சட்டம் இயற்றி உள்ளோம். நீர்பாசன துறையின் நிர்வாகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மாநில நீர் கொள்கை 2022 செயல்படுத்தப்பட்டு உள்ளது.தற்போது நீர்வள துறை தொடர்பாக 29 வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. அதில் 14 மத்திய அரசிலும், மாநில அரசில் 15ம் வருகிறது. வரும் நாட்களில் புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். எதிர்காலத்திற்காக தண்ணீரை சேமிப்பது, நம் அனைவரின் கடமை.இவ்வாறு அவர் பேசினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை