ஏ.டி.எம்.,களில் நுாதன திருட்டு ஏஜன்சி ஊழியர்கள் 6 பேர் கைது
மஹாலட்சுமி லே -- அவுட்,ஏ.டி.எம்., மையங்களில் நுாதனமான முறையில் பணம் திருடி வந்த ஏஜன்சி நிறுவன ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு மஹாலட்சுமி லே -- அவுட் போலீசார், கடந்த மாதம் 25ம் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது கெம்பேகவுடா லே -- அவுட்டில் 6 பேர், நடுரோட்டில் நின்று சண்டை போட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பணத்தகராறில் சண்டையிட்டுக் கொண்டதாக கூறினர். ஆனால் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்கள் வந்த காரில் இருந்து 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.ஆறு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.அவர்களின் பெயர்கள் சிவு, சமீர், மனோகர், கிரிஷ், ஜக்கேஷ், ஜஸ்வந்த் என்பது தெரிந்தது.இவர்கள் அனைவரும் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் ஏஜன்சி நிறுவனத்தில், ஊழியர்களாக வேலை செய்தனர்.ஏ.டி.எம்., இயந்திரங்களின் பாஸ்வோர்ட் பற்றி 6 பேருக்கும் நன்கு தெரியும். தங்களுக்கு பணம் தேவைப்படும்போது பாஸ்வர்ட்டை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்து உள்ளனர்.ஏ.டி.எம்., இயந்திரங்களில் எவ்வளவு பணம் உள்ளது என்று வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இன்னொரு ஏ.டி.எம்.,மில் பணம் திருடி இங்கு வைப்பதை வாடிக்கையாக வைத்து இருந்தனர். திருடும் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் தெரிந்தது.இவர்களிடம் இருந்து மேலும் ஏழு லட்சம் ரூபாய் ரொக்கம், 90 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.