தடையை மீறி பட்டாசு வெடித்ததால் டில்லியை சூழ்ந்தது புகை
புதுடில்லி:தீபாவளி நாளில் தடையை மீறி ஏராளமானோர் பட்டாசு வெடித்ததால், காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரக் குறியீடு 24 மணி நேர சராசரியாக நேற்று காலை 9:00 மணிக்கு 362 ஆக பதிவாகி இருந்தது. இது கடந்த 3 ஆண்டுகளை விட அதிகம் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.டில்லியில் நேற்று காலை 9:00 மணிக்கு 362 ஆக மிகவும் மோசமான நிலையில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு தீபாவளி நாளில் காற்றின் தரக்குறியீடு 218 ஆக இருந்தது. அதுவே, 2022ல் 312 ஆகவும், 2021ல் 330 ஆகவும் பதிவாகி இருந்தது.அலிபூரில் நேற்று காற்றின் தரக்குறியீடு 355 ஆக இருந்தது. ஆனந்த் விஹார் - 396, அசோக் விஹார் - 389, அய நகர் - 351, பாவானா - 396, புராரி - 394, மதுரா - 371 என பதிவாகி இருந்தது.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் - 371, துவாரகா - 376, ஜஹாங்கிர்புரி - 390, முண்ட்கா - 375, பட்பர்கஞ்ச் - 365, ரோஹிணி - 390, சோனியா விஹார் - 396, வஜிர்பூர் - 390 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், முகக் கவசம் இன்றி பொதுஇடங்களில் நடமாடுவோருக்கு-- சுவாச மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குழந்தைகள், முதியோர் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை காலத்தில் காற்றில் மாசு அதிகரிப்பதைத் தடுக்க கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்க டில்லி அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமானோர் தடையை மீறி பட்டாசு வெடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தடையை மீறி பட்டாசு விற்பனை செய்வோரை பிடிக்க 377 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ சங்கங்கள் காற்று மாசு விழிப்புணர்வு பிரசாரம் செய்தன. போலீஸ் தரப்பிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.இருந்தபோதிலும், டில்லி மற்றும் புறநகரில் ஏராளமானோர் நேற்று முன் தினம் இரவு தடையை மீறி விதவிதமான பட்டாசுக்களை வெடித்து மகிழ்ந்ந்தனர்.கிழக்கு மற்றும் மேற்கு டில்லியில் ஜவுனாபூர், பஞ்சாபி பாக், புராரி மற்றும் கைலாஷ் ஆகிய இடங்களில் வானில் வண்ணமயமான பட்டாசுகள் புகையைக் கக்கின.கடந்த ஆண்டு அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பது குறைந்தது, மழை பெய்ததும் சாதகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை கைகொடுக்கவில்லை.காற்றின் வேகமும் மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் இருந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 70 சதவீதமாக இருந்தது.அண்டை மாநிலங்கள்:ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் காற்றின் தரம் நேற்று மிகவும் மோசமான நிலையில் இருந்தது. யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையிலேயே பதிவாகியுள்ளது.நேற்று காலை 9:00 மணிக்கு, ஹரியானாவின் குருகிராமில் காற்றின் தரக்குறியீடு 344 ஆக பதிவாகி இருந்தது. ஜிண்ட் - 340, அம்பாலா - 308, குருக்ஷேத்ரா - 304, பஹதுர்கர் - 289, பல்லப்கர் - 224, பிவானி - 288, சார்க்கி தாத்ரி - 228, பரிதாபாத் - 236, பதேஹாபாத் - 248, ஹிசார் - 252, கர்னால் - 232, பன்ச்குலா - 232, ரோஹ்தக் மற்றும் சோனிபட் - 259, சிர்சா - 217, யமுனாநகர் - 265 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 9:00 மணிக்கு 314 ஆக பதிவாகி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மண்டி கோபிந்த்கர் - 331, கன்னா - 308, ஜலந்தர் - 253, லூதியானா - 214, பாட்டியாலா - 260 ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. பச்சை பட்டாசு
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகரான, யூனியன் பிரதேசமான சண்டிகரில் நேற்று காலை காற்றின் தரக்குறியீடு 303 ஆக பதிவாகி இருந்தது. தீபாவளியன்று சண்டிகரில் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை பசைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் பல பகுதிகளில் இரவு 10:00 மணிக்குப் பிறகும் ஏராளமானோர் விதவிதமான பட்டாசுகளை வெடித்தனர்.தீபாவளி, குர்புராப், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய கொண்டாட்ட நாட்களில் பச்சை பட்டாசு மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும் என பஞ்சாப் அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.பேரியம் உப்பு, ஆன்டிமனி, லித்தியம், பாதரசம், ஆர்சனிக், ஈயம் அல்லது ஸ்ட்ரோண்டியம் குரோமேட் ஆகிய கலவை இல்லாமல் தயாரிக்கப்படும் பச்சை பட்டாசு மட்டுமே பஞ்சாபில் விற்கவும், வெடிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
அமைச்சர் நன்றி!
டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்காமல் கொண்டாடிய டில்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரியளவில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்ததால், காற்றின் தரக் குறியீட்டில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அனைவருமே தடையை முழுமையாகக் கடைப்பிடித்திருந்தால் காற்றின் தரம் இன்னும் மேம்பட்டிருக்கும். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் இரண்டு நடமாடும் 'ஸ்மோக் கன்' எனப்படும் தண்ணீர் தெளிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., குற்றச்சாட்டு
டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜேந்தர் குப்தா கூறியதாவது: மாநகர் முழுதும் சாலைகள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றில் இருந்து தூசியால்தான் காற்றில் மாசு அதிகரித்து வருகிறது.முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷி சிங் ஆகிய இருவரும், தீபாவளிக்கு முன்னதாகவே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என கூறினர். ஆனால், ஒரு சாலையைக் கூட சீரமைக்கவில்லை. ஆம் ஆத்மி தலைவர்கள், அரசியலில் கவனம் செலுத்துவதை தவிர்த்து டில்லி மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தீபாவளிக்கு முன் இருந்ததைப் போலவே இப்போதும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.பட்டாசு வெடித்ததால் மாசு அதிகரித்ததாக டில்லி அரசு கூறுவதை ஏற்க முடியாது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ள மண் மற்றும அவற்றில் இருந்து தூசு கிளம்புதவதால்தான் காற்று மாசு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.