| ADDED : பிப் 20, 2024 04:23 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தேர்வு செய்யப்பட்டார்.காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின், 1999ல் முதல் முறையாக லோக்சபா தேர்தலில், சோனியா வென்றார். கடந்த 2004 வரை உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும், 2004ல் இருந்து உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் தொடர்ந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, 77 வயதாகும் சோனியா, கடந்த லோக்சபா தேர்தலின் போதே, இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி வந்தார்.அதன்படி, சில தினங்களுக்கு முன்பு, ராஜ்யசபா தேர்தலில், ராஜஸ்தானில் இருந்து அவர் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை '' என, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததாக சோனியா விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தேர்வு செய்யப்பட்டார். மேலும் பா.ஜ., தலைவர்களான சுன்னிலால் கராசியா மற்றும் மதன் ரத்தோர் ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 5 லோக்சபா தேர்தலில் சோனியா வெற்றி பெற்று உள்ளார். இன்று அவர் முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.